பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

போபால் - புதுதில்லி இடையே வந்தே பாரத் விரைவு ரயிலைத் தொடங்கி வைத்து பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்

Posted On: 01 APR 2023 6:35PM by PIB Chennai

பாரத் மாதா கீ ஜே!

பாரத் மாதா கீ ஜே!

மத்தியப் பிரதேச ஆளுநர் திரு.மங்குபாய் படேல், முதலமைச்சர் சிவராஜ், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி மற்றும் திரளாக வந்திருக்கும் போபாலின் என் அன்புச் சகோதர, சகோதரிகளே!

ராமநவமி அன்று இந்தூர் கோவிலில் நடந்த சோகம் குறித்து முதலில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தால் நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

நண்பர்களே,

இன்று மத்தியப் பிரதேசத்திற்கு முதல் வந்தே பாரத் விரைவு ரயில் கிடைத்துள்ளது. வந்தே பாரத் விரைவு ரயில் போபால் - டெல்லி இடையேயான பயணத்தை வேகமாக்கும். இந்த ரயில் தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மற்றும் வணிகர்களுக்கு புதிய வசதிகளைக் கொண்டு வரும்.

நண்பர்களே,

இது நமது திறமை, திறன் மற்றும் நம்பிக்கையின் சின்னமாக உள்ளது. இந்த ரயில் சுற்றுலாவை மேம்படுத்த உதவும். இதையடுத்து, சுற்றுலா தலங்களான சாஞ்சி ஸ்தூபம், பீம்பேட்கா, போஜ்பூர், உதயகிரி குகைகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப் போகிறது. சுற்றுலா விரிவடையும் போது, பல வேலை வாய்ப்புகள் உயரத் தொடங்குவதுடன், மக்களின் வருமானமும் அதிகரிக்கிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதாவது, இந்த வந்தே பாரத் மக்களின் வருமானத்தைப் பெருக்கும் ஊடகமாகவும் மாறும். மேலும் இது இந்தப் பகுதியின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான ஒரு ஊடகமாகவும் மாறும்.

நண்பர்களே,

21ஆம் நூற்றாண்டின் இந்தியா இப்போது புதிய சிந்தனையுடனும் புதிய அணுகுமுறையுடனும் செயல்பட்டு வருகிறது. முந்தைய அரசுகள் நாட்டு மக்களின் மனநிறைவைக் கருத்தில் கொள்ளவில்லை. வாக்கு வங்கி அரசியலில் மும்முரமாக இருந்தன. ஆனால் நாட்டு மக்களின் திருப்திக்காக நாங்கள் செயல்படுகிறோம். இந்திய ரயில்வே அதற்கு ஒரு உதாரணம். இந்திய ரயில்வே உண்மையில் சாதாரண இந்திய குடும்பத்தின் போக்குவரத்து அமைப்பு ஆகும். இந்த போக்குவரத்து,  காலத்துக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டிருக்க வேண்டாமா? ரயில்வேயை இப்படி இழிவான நிலையில் விட்டுச் சென்றது சரியா?

நண்பர்களே,

2014-ம் ஆண்டு, நீங்கள் எனக்கு சேவை செய்ய வாய்ப்பு கொடுத்தபோது, இனி இப்படி நடக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். இப்போது ரயில்வே புத்துயிர் பெற்றுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இந்திய ரயில்வேயை உலகின் சிறந்த ரயில் கட்டமைப்பாக மாற்றுவதே எங்களது தொடர் முயற்சியாகும். 2014-ம் ஆண்டுக்கு முன் ஆளில்லா ரயில் கேட்களினால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக புகார் எழுந்தது. சில சமயம் பள்ளிக் குழந்தைகளின் மரணம் குறித்து நெஞ்சை உலுக்கும் செய்திகள் வெளிவந்தன. இன்று இந்திய ரயில்வே மிகவும் பாதுகாப்பானதாக மாறிவிட்டது.

நண்பர்களே,

விபத்துகளில் இருந்து பாதுகாப்பு அளித்தது மட்டுமல்ல, பயணத்தின் போது பயணிகள் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவசர காலங்களில், விரைவாக உதவி வழங்கப்படுகிறது. இத்தகைய ஏற்பாட்டின் மூலம் நமது சகோதரிகள் மற்றும் மகள்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். ரயில் நிலையங்களில் சிறிது நேரம் தங்குவது கூட ஒரு தண்டனையாக இருந்தது. இன்று தூய்மை சிறப்பாக உள்ளதுடன், ரயில்கள் தாமதமாகிறது என்ற புகார்களும் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

நண்பர்களே,

இன்று, இந்திய ரயில்வே சிறிய கைவினைஞர்களின் தயாரிப்புகளை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் கொண்டு செல்லும் ஒரு முக்கிய ஊடகமாக மாறி வருகிறது. 'ஒரே நிலையம், ஒரே தயாரிப்பு' திட்டத்தின் கீழ், ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியின் புகழ்பெற்ற ஆடைகள், கலைப்படைப்புகள், ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், பாத்திரங்கள் போன்றவற்றை பயணிகள் நிலையத்திலேயே வாங்கலாம். இதற்காக நாட்டில் சுமார் 600 விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மிகக் குறுகிய காலத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் இந்த விற்பனை நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகளுக்கு மத்தியில், மேலும் ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். மோடியின் பெயரை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று சிலர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இவர்களின் சதிகளுக்கு மத்தியில் நாட்டு மக்களாகிய நீங்கள் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். வளர்ந்த இந்தியா என்ற நமது இலக்கை அடைய மத்தியப் பிரதேசத்தின் பங்கை நாம் மேலும் அதிகரிக்க வேண்டும். இந்த புதிய வந்தே பாரத் விரைவு ரயில் இந்த தீர்மானத்தின் ஒரு பகுதியாகும். மீண்டும் ஒருமுறை, இந்த நவீன ரயிலுக்கு மத்தியப் பிரதேச மக்களுக்கும், போபாலின் எனது சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நம் அனைவருக்கும் இனிய பயணம் அமையட்டும்! மிக்க நன்றி! மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

 

----

VJ/CR/KPG


(Release ID: 1914727) Visitor Counter : 168