உள்துறை அமைச்சகம்
அஸோசம்-ன் 2023-ம் ஆண்டின் வருடாந்திர கூட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித்ஷா பங்கேற்பு
Posted On:
28 MAR 2023 4:23PM by PIB Chennai
உள்ளடக்கிய மற்றும் நீடித்த சர்வதேச வளர்ச்சிக்கான வழிகள் பாரத்-100 என்ற கருப்பொருளின் அடிப்படையில் அஸோசம்- வர்த்தக அமைப்பின் 2023-ம் ஆண்டின் வருடாந்திர கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.
இதில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது தேச மக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை செலுத்தினால் மட்டுமே அனைத்துத் துறைகளிலும் இந்தியா தன்னிறைவு பெறும் என்றார். 130 கோடி மக்கள் தொகை என்பது வளர்ச்சிக்கான இலக்கை அடைய தடையாக இருக்கும் என பலர் கருதுவதாகக் கூறிய அவர், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் தான், வளர்ச்சி சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டார். இதனைக் கருத்தில் கொண்டே ஒரு மத்திய அரசு, 28 மாநில அரசுகள், இரண்டு யூனியன் பிரதேச அரசுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 2.5 லட்சம் உள்ளாட்சி அமைப்புகள், 30-31 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், 6.4 லட்சம் கிராமங்கள் மற்றும் அவற்றின் பஞ்சாயத்துகள், மாவட்ட பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் நகராட்சி மாநகராட்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்த நிர்வாக அமைப்பை உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்டார். முழு அரசாங்க அணுகுமுறையின் அடிப்படையில் அடித்தளத்திலிருந்து வளர்ச்சிக்கான வேர்கள் ஊன்றபட்டிருப்பதாகக் கூறினார்.
மாறுப்பட்ட சித்தாந்தங்கள் இருந்த போதிலும், இந்தியாவை ஒரு குழுவாக இணைத்து தொலைநோக்கு பார்வையுடன் வழி நடத்துவதே வளர்ச்சிக்கு வித்திடும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய கொள்கையால் இந்தியா கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருப்பதை சுட்டிக்காட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்ற அணுகுமுறையில் பணியாற்றியதாலேயே கொவிட்-19 சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது என்று குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கொவிட்-19 பெருந்தொற்று காலத்தை இந்தியா மட்டுமே மிகச்சிறப்பான முறையில் எதிர்கொண்டது என்பதை உலக நாடுகள் உணர்ந்திருப்பதாக திரு அமித்ஷா தெரிவித்தார். எமது சித்தாந்தங்கள் இந்தியாவை பாதுகாப்பானதாக மாற்றியிருப்பதுடன், மத்திய அரசின் குறிப்பிட்ட சில திட்டங்கள், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டு இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இந்த சாதனைகள் உலக நாடுகளுக்கு வியப்பை ஏற்படுத்தியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2022-ம் ஆண்டில் 8,840 கோடி டிஜிட்டல் பணபரிமாற்றம் நடந்திருப்பதை நினைவு கூர்ந்த திரு அமித்ஷா, இதில் யுபிஐ வாயிலாக மொத்தம் ரூ.126 லட்சம் கோடி நிதி பரிமாற்றம் நடைபெற்றிருப்பதையும் குறிப்பிட்டார். இந்தியாவின் 99 சதவீத கிராமங்கள் மின்வசதி பெற்றிருப்பதுடன், நாட்டில் உள்ள 1.90 லட்சம் பஞ்சாயத்துக்கள் பாரத் நெட் இணையதள வசதிகள் மூலம் இணைக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த 6 ஆண்டுகளில் 6 லட்சம் கிலோ மீட்டர் கண்ணாடி இழை பதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு 6.1 கோடியாக இருந்த அகண்ட அலைவரிசை இணைப்புகள் கடந்த 2022ம் ஆண்டு 82 கோடியாக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட திரு அமித் ஷா, இலக்கை அடைய அனைத்து வகைகளிலும் துணிச்சல் மற்றும் செயல்திறனுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
கடந்த 2024ம் ஆண்டுக்கு முன்பாக, 60 கோடி மக்கள், வங்கி கணக்கு இல்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 9 ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வங்கிக்கணக்கு வசதியை உருவாக்கித் தந்திருப்பதையும் நினைவு கூர்ந்தார். அவ்வாறு தொடங்கப்பட்ட 48 கோடி வங்கி கணக்குகளில் 53 அமைச்சகங்களின் 310 திட்டங்களுக்கான மானியத் தொகையான ரூ. 24 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
கடந்த 2014ம் ஆண்டு 91 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கியதாக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள், தற்போது 1.46 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை உள்ளடக்கியதாக மாறியிருப்பதாக குறிப்பிட்ட திரு அமித்ஷா, மத்திய அரசு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 100 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்கியதாகவும், கடந்த 10 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் அரசியல் ஸ்திரத்தன்மை கொண்ட காலமாக இடம்பெற்றிருப்பதையும் திரு அமித் ஷா நினைவு கூர்ந்தார்.
***
AD/ES/RS/KRS
(Release ID: 1911590)
Visitor Counter : 141