விவசாயத்துறை அமைச்சகம்

தேசிய பயிர்க்காப்பீடு இணையதளம் மூலம் இழப்பீடு தொகையை பெறும் மின்னணு முறையை மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் சிங் அறிமுகப்படுத்தினார்

Posted On: 23 MAR 2023 2:40PM by PIB Chennai

தேசிய பயிர்க்காப்பீடு இணையதளம் மூலம்  இழப்பீடு தொகையை பெறும் டிஜிட்டல் க்ளைம் எனப்படும் மின்னணு பணப்பரிமாற்ற முறையை புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் பிரதமரின் பசல் பீமா யோஜனா என்னும் பயிர்க்காப்பீடுத் திட்டத்திற்கான இழப்பீடுத்தொகையை மின்னணு பரிமாற்றத்தின் மூலம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த முடியும்.

இந்தத்திட்டத்தின் மூலம் 6 மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை மின்னணு முறையில் வழங்கப்படும். பயிர்க்காப்பீடு இழப்பீடு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு நிதி சார்ந்த ஆதரவு அளிக்கவும் இந்த மின்னணு பணப்பரிமாற்ற முறை பெரிதும் கைகொடுக்கும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர சிங் தோமர், பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத்தொகையை  மின்னணு முறையில் வழங்குவது புரட்சிகரமான நடவடிக்கையாக இருப்பதுடன், வேளாண் துறை அமைச்சகத்திற்கு பெருமை சேர்ப்பதாக இருப்பதாகவும் கூறினார். வேளாண் துறையில் விவசாயிகளை தற்சார்புடையவர்களாக மாற்றுவதற்கு இந்த மின்னணு பணப்பரிவர்த்தனை உதவும் என்று குறிப்பிட்டார்.

 ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், சத்தீஸ்கர், உத்ராகண்ட், ஹரியானா ஆகிய 6 மாநிலங்களைச்சேர்ந்த  காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு 2023, மார்ச் 23ம் தேதி மொத்தம் ரூ.1260.35 கோடி டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பிரதமரின் பசல் பீமா காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு இதுவரை ரூ.1.32 லட்சம் கோடி இழப்பீடு செலுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காப்பீடு செய்துள்ள எஞ்சிய மற்ற மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகளுக்கும்  டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் ஆந்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை  பிரதமரின் பசல் பீமா காப்பீடுத் திட்டத்தில் மீண்டும் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், தெலங்கானா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் மீண்டும் இணைய விரும்பம் தெரிவித்திருப்பதாக கூறினார்.

IMG_9908.JPG

நடைமுறையில் உள்ள திட்டத்தின் படி, காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தாமதம் ஏற்படுவதாகவும் கூறினார். இந்த தாமதத்தை களைவதுடன், விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டே மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை அறிமுகம் செய்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தேசிய பயிர்க்காப்பீடு இணையதளம் மற்றும் பொது நிதி மேலாண்மை முறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த டிஜிட்டல் பணப்பரிமாற்ற தொழில்நுட்பம் செயல்படுவதாகவும் திரு நரேந்திர சிங் தோமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில்  வேளாண்மை  மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு கைலாஷ் சௌத்ரி, உத்தரப்பிரதேச வேளாண் அமைச்சர், மத்திய வேளாண் துறை செயலாளர் திரு மனோஜ் அஹூஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இந்திய வேளாண் காப்பீடு நிறுவனம் மற்றும் பாரத ஸ்டேட்பேங்க் வங்கியின் காப்பீடுத் தொகை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

***

SM/ES/RS/KRS



(Release ID: 1910010) Visitor Counter : 146