சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், மகாராஷ்டிர மாநிலத்தின் சாம்பாஜி நகர் ஆகிய இடங்களில் மத்திய அரசின் நலவாழ்வு மையங்களை, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் முன்னிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

“சமுதாயங்களுக்கு சுகாதாரச் சேவையை நெருக்கமாகவும், எளிதாகவும் வழங்க வேண்டுமென்ற பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்குக்கு ஏற்ப, 2014 ஆம் ஆண்டில் 25 ஆக இருந்த மத்திய அரசின் சுகாதார திட்ட மையங்களின் எண்ணிக்கை இன்று 79 ஆக உயர்ந்துள்ளது”

“அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தரமான சுகாதார சேவைகளை வழங்குவது நமது அரசின் பொறுப்பாகும்” : டாக்டர் மன்சுக் மாண்டவியா

“இந்த மையங்களில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நடைமுறைகளுடன் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் பயனை அரசு சுகாதார மையங்கள் வழங்கும்” : டாக்டர் பாரதி பிரவின் பவார்

Posted On: 22 MAR 2023 1:24PM by PIB Chennai

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், மகாராஷ்டிராவின் சாம்பாஜி நகர் ஆகிய இடங்களில் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் நலவாழ்வு மையங்களை மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் முன்னிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அதுல் மோரேஸ்வர் சவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.பி.ஆர்.நடராஜன், திரு.சையது இம்பியாஜ் ஜலீல், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநில மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்கும் முக்கியப் பங்கை இந்த இரண்டு மையங்களும் ஆற்றும் என தெரிவித்தார். கோயம்புத்தூர் சாம்பாஜி நகரில் மத்திய அரசின் நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டதையடுத்து, இம்மையங்களின் பயனாளிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். “அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தரமான சுகாதார சேவைகளை வழங்குவது நமது அரசின் பொறுப்பாகும்” என்று அவர் தெரிவித்தார்.

 மருத்துவ சேவைகளை எளிதில் அணுக இந்த மையங்கள் உதவும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். சமுதாயங்களுக்கு சுகாதாரச் சேவையை நெருக்கமாகவும், எளிதாகவும் வழங்க வேண்டுமென்ற பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்குக்கு ஏற்ப, 2014 ஆம் ஆண்டில் 25 ஆக இருந்த மத்திய அரசின் சுகாதார திட்ட மையங்களின் எண்ணிக்கை இன்று 79 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசின் சுகாதார சேவைகள் குறித்து பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பயனாளிகளுக்கு மருத்துவ சேவைகள்  விரைந்து சென்றடைய நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாகக் கூறினார்.

இந்த சுகாதார சேவைகள் சிறப்பான முறையில்  சென்று சேர்வதை கண்டறிவதற்காக அனுதின கண்காணிப்பு, மருத்துவச் சேவைக்கான கட்டணங்களை திருப்பி செலுத்துதல், தனியார் மருத்துவமனைகள் வாயிலாக சுகாதார சேவைகளை வழங்கும் வசதிகளை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசின் சுகாதார சேவைகள் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தற்போது டிஜிட்டல் முறையில் மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில், மேம்படுத்தப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் மலிவான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இன்றைக்கு நாடு முழுவதும் 9100 மலிவு விலை மருந்தகங்கள் அமைக்கப்பட்டு இருப்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் மேலும் கூறுகையில், மக்களின் மருத்துவ சேவைக்காக சுகாதார நல மையங்களை அமைப்பதோடு மட்டுமல்லாமல்,  மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதிக எண்ணிக்கையிலான மருத்துவக்கல்லூரிகளின் மூலம் மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்குவதை  உறுதி செய்யவும் அனைத்திற்குமான நடவடிக்கை என்ற அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்தார். உடல் ஆரோக்கியமே  தலைசிறந்த எதிர்காலம் என்பதால், உடல்நலத்திற்காக முதலீடு செய்வது எதிர்காலத்திற்கான முதலீடாக இருக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்துவதற்கு மத்திய அரசு ஓய்வின்றி பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள மக்களுக்கும்,  அரசின் மருத்துவ சேவை சென்றடைய வேண்டும் என்பதற்காக தொலைதூர மருத்துவ ஆலோசனை, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்ட மன்சுக் மாண்டவியா, மேலும் மலிவு விலை மருந்தகங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், ஆயுஷ்மான் பாரத் மருத்துவத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அனைவருக்குமான சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பயனாளிகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த டாக்டர் பாரதி பிரவின் பவார், இந்த இரண்டு பகுதிகளிலும் பணியாற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் சுகாதார சேவை நலவாழ்வு மையத்தை பரிசளித்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நடைமுறைகளுடன் கூடிய இந்த மத்திய அரசின் சுகாதார சேவை நலவாழ்வு மையம் ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் சுகாதார சேவை நலவாழ்வு திட்டத்தின் கீழ் சுகாதார வசதிகளை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.  பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு இயக்கம், சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் ஆகியவை நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார பலனை அளிப்பதாக தெரிவித்தார்.

தென்னிந்தியாவின் ஜவுளித் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் மற்றும் ஜவுளி மற்றும் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய பட்டு துணிகளுக்கு புகழ்பெற்ற  சாம்பாஜி நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய நலவாழ்வு  மையங்கள் கோயம்புத்தூர் மற்றும் சாம்பாஜி நகரில் வசிக்கும் பயனாளிகள், ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், அப்பகுதிகளை சுற்றி வசிப்பவர்களுக்கும் இந்த மையங்கள் பயன்படும் என்று அவர் கூறினார்.

உதாரணத்திற்கு கோயம்புத்தூரில் இருந்து 8000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக 400 முதல் 500 கி.மீ. வரை பயணம் செய்ய வேண்டியிருந்தது.  கோயம்புத்தூர் மற்றும் சாம்பாஜி நகரில் உள்ள மத்திய அரசின் சுகாதார நலவாழ்வு மையங்கள் பயனாளிகளுக்கு புறநோயாளி சிகிச்சை சேவையை அளிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த மையங்கள் செயல்படும் போது தனியார் மருத்துவமனைகளும் இதனுடன் இணைந்து ஓய்வூதியதாரர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க முற்படும்.

மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிருஷ்ணாராவ் கரார் பேசிய போது, பயனாளிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு சுகாதாரம் மற்றும் நலவாழ்வுத்துறைகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாக கூறினார்.

****

(Release ID: 1909473)

PKV/IR/ES/RR/RS/AG/KRS


(Release ID: 1909533) Visitor Counter : 272