தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
சர்வதேச அளவிலான சமூக பாதுகாப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்வது முக்கியம் : திரு. யாதவ்
Posted On:
20 MAR 2023 8:52AM by PIB Chennai
மக்களை மையப்படுத்திய நடவடிக்கைகள் மூலம் உலக நாடுகள் சவால்களை எதிர்கொண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு.பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். அமிர்தசரஸில் நடைபெற்ற எல்.20 தொடக்க கூட்டத்தில் மெய்நிகர் வாயிலாக பங்கேற்ற அவர், போட்டி நிறைந்த சூழலில் நமது தொழிலாளர்களை அறிவாற்றல் மற்றும் பன்முகத் திறமை பெற்றவர்களாக உருவாக்க அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.
சர்வதேச சமூக பாதுகாப்பை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்வது மிக முக்கிய விஷயம் என்பதால் அதற்கு நம்முடைய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். குறிப்பாக இந்த சமூக பாதுகாப்பின் கீழ் முறைசாரா துறையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், சமூக காப்பீடு மற்றும் சமூக நிதியுதவி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதையும் சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வழிவகை செய்வது, ஆண், பெண் பாகுபாடு இல்லாத வளர்ந்த சமூகத்தை நோக்கி வழிநடத்திச் செல்லும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை உள்ளடக்கிய வசுதைவ குடும்பகம் என்பதே ஜி20 நாடுகள் அமைப்பின் கருப்பொருள் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜி20 மற்றும் எல்20 கூட்டங்கள் வாயிலாக தொழிலாளர் சந்தை சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற முனைப்பான கொள்கைகளை அரசு மேற்கொள்ள உதவி செய்திருப்பதையும் நினைவுகூர்ந்தார். டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் உலகளவில் மாபெரும் மாற்றங்களை உருவாக்கியிருப்பதை நினைவுகூர்ந்த அமைச்சர், குறிப்பாக புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு, டிஜிட்டல்மயமாக்கல், டிஜிட்டல் பொருளாதாரம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள அடித்தளம் அமைத்து கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
ஜி20 நாடுகளின் அனைத்து தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உருவாக்கும் முயற்சிக்கு பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் திரு.பூபேந்திர யாதவ், ஜி20 நாடுகளுக்கு இந்தியாவின் தலைமைத்துவம், உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்து தீர்வு காணக் கூடிய வாய்ப்பை அளிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
***
(Release ID: 1908638)
SRI/ES/RR/KRS
(Release ID: 1908717)
Visitor Counter : 174