பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

‘இந்தியா முழுவதும் 250 மாதிரி கிராம பஞ்சாயத்து தொகுப்புகளை உருவாக்கும் திட்ட’ செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து திரு கிரிராஜ் சிங் ஆய்வு

Posted On: 17 MAR 2023 10:56AM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தலைமையில், புதுதில்லியில் 16ந் தேதி காணொலி மூலம் 'இந்தியா முழுவதும் 250 மாதிரி கிராம பஞ்சாயத்து தொகுப்புகளை  உருவாக்கும் திட்டம' செயல்பாட்டின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கான கூட்டம்  நடைபெற்றது. தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தின் இளைஞர்கள் , 250 மாதிரி கிராம பஞ்சாயத்து தொகுப்புகளின் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 210க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இக்கூட்டத்தில் இணைந்தனர்.  கூட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு  சுனில் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திட்டம் பற்றி கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு கிரிராஜ் சிங், ‘இந்தியா முழுவதும் 250 மாதிரி கிராம பஞ்சாயத்து தொகுப்புகளை உருவாக்கும் திட்டத்தின் ’  கீழ் உள்ள கிராம பஞ்சாயத்துகளின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், மாதிரி கிராம பஞ்சாயத்துகளை மேம்படுத்துவது குறித்து வலியுறுத்தினார். தொலைதூரப் பகுதிகளில் பணிபுரியும் இளைஞர்கள் சமூகப் பங்கேற்புடன் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கிராம பஞ்சாயத்துகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு,

அங்கு  செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தும் உத்திகள், கிடைக்கக்கூடிய வளங்களை ஒருங்கிணைத்து, இந்த மாதிரி கிராம பஞ்சாயத்துகளின் வறுமைக் குறைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்து பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது  ஆகியவை பற்றி மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

இத்திட்டத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், ஒரு நாள் தேசிய அளவிலான பயிலரங்கை கூட்டவும், இந்த திட்டத்தின் கீழ் உள்ள கிராம பஞ்சாயத்துகளின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளை ஆய்வு  செய்ய கண்காணிப்பு தகவல் பலகையை உருவாக்கவும் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

கூட்டத்தின் தொடக்கத்தில்,  ‘இந்தியா முழுவதும் 250 மாதிரி கிராம பஞ்சாயத்து தொகுப்புகளை  உருவாக்குவதற்கான திட்டத்தின்’ கீழ் பல்வேறு அம்சங்கள் மற்றும் முன்னேற்றம் பற்றிய விரிவான விளக்கக்காட்சி வழங்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கீழ்மட்ட அளவில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

 

***



(Release ID: 1907958) Visitor Counter : 132