வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

என்ஒய்சி 2023– “இந்தியாவின் மாற்றத்திற்கு உதவும் நகரங்கள் மற்றும் இளைஞர்கள்”

प्रविष्टि तिथि: 14 MAR 2023 3:10PM by PIB Chennai

ஜி20 அமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றுள்ள நிலையில், தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தின் பொலிவுறு நகரங்கள் இயக்கம் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் சக்தி ஆகியவை இணைந்து என்ஒய்சி 2023 என்ற மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இந்த மாநாட்டில் வினாடி-வினா போட்டி, விவாதப் போட்டிகள்,  ஜனநாயக நடைமுறைகள் பற்றிய இளைஞர்களின் புரிதலுக்கு உதவும் விவாதங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன. 10-க்கும் மேற்பட்ட அமர்வுகளில் 50-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 100-க்கும் மேற்பட்ட நகர்ப்புற தலைவர்கள், 300-க்கும் மேற்பட்ட அறிக்கைகள், 500-க்கும் மேற்பட்ட பருவநிலை தலைவர்கள் என கடந்த 2 நாட்களாக 3000-க்கும் மேற்பட்டோர் புதுதில்லி விஞ்ஞான் பவனில் நேரிலும், ஆன்-லைன் மூலமாகவும் கலந்து கொண்டனர். ஏராளமான மாணவர்கள், இளம் தொழில் நிபுணர்கள், வல்லுநர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

இதன் நிறைவு அமர்வில் ஜி20 தலைமைத்துவத்தின் ஷெர்பா, திரு.அமிதாப் கந்த் கலந்து கொண்டு இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அனைவருக்கும் சமமான எதிர்காலத்தை வழங்குவதில் இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாக, பொருளாதாரத்தின் தூண்களாக புதிய கண்டுபிடிப்புகளை வழங்குபவர்களாக, சுற்றுச்சூழல் உணர்வு மிக்கவர்களாக திகழ்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். வளமான எதிர்காலத்திற்கான செயல் திட்டத்தை வகுக்க இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து கரம் கோர்க்க வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார்.

முன்னதாக இந்த மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி, இளைஞர்களின் ஆற்றல் மற்றும் உந்துதல் காரணமாக இந்தியா 2047 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகையிலும் உலகின் தலைமை பொறுப்பு வகிக்கும் நாடாக மாறும் என்று கூறினார். இந்த மாநாட்டில், இளைஞர்கள் தலைமையில் வளர்ச்சி, என்பது குறித்து உரையாற்றிய அமைச்சர், இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அரசு ஆண்டுக்கு 90,000 கோடி ரூபாய் செலவிடுவதாக கூறினார்.

இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்த அமைப்புகளை பாராட்டிய அமைச்சர், பருவநிலை மாற்றம், எதிர்காலப் பணிகள், ஜனநாயகத்தில் இளைஞர்கள் போன்ற விஷயங்கள் குறித்து தங்களது எண்ணங்களை இளைஞர்கள் வெளிப்படுத்தும் தளமாக இது இருக்கும் என்று கூறினார்.

இந்த மாநாடு, இளைஞர்கள் நாளைய பிரகாசமான தலைவர்களாக மாறுவதற்கு ஏற்ற வகையில், அவர்களை உருவாக்கும் தளமாக இருக்கும். அண்மைக் காலங்களில் இளைஞர்களிடையே தொழில் முனைவு உணர்வு அதிகரித்துள்ளதன் காரணமாக, ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

***

(Release ID: 1906719)

AD/PKV/RR


(रिलीज़ आईडी: 1906787) आगंतुक पटल : 159
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu