எரிசக்தி அமைச்சகம்
கோடைக்காலத்தில் போதுமான அளவுக்கு மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய மின்சார அமைச்சகம் பன்முனை உத்திகளை வகுத்துள்ளது
Posted On:
09 MAR 2023 10:50AM by PIB Chennai
கோடைக்காலத்தின் போது போதுமான அளவில் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய மின்சார அமைச்சகம் பன்முனை உத்திகளை வகுத்துள்ளது. மத்திய மின்சாரத்துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் தலைமையில் கடந்த 7-ந் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மின்சாரத்துறை, நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். வரும் மாதங்களில் குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மின்சாரத்தேவை அதிகளவில் இருக்கும் என்பதால் அதனை சமாளிக்கும் பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மத்திய மின்சாரத் துறை செயலர் திரு.அலோக் குமார், மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் திரு.கன்ஷியாம் பிரசாத், இந்திய தொகுப்புக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.எஸ்.ஆர்.நரசிம்மன், ரயில்வே வாரிய உறுப்பினர் திருமதி. ஜெயா வர்மா சின்ஹா, நிலக்கரி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு.சஞ்சீவ் குமார் கஸ்சி, என்டிபிசி-யின் இயக்கப் பிரிவின் இயக்குனர் திரு.ரமேஷ் பாபு ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த உத்திகளின் ஒரு பகுதியாக, நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி நிலையங்களில், முன்கூட்டியே தேவையான அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ளுமாறு மின் பயன்பாட்டு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் பற்றாக்குறை காலத்தில் இது போன்ற பராமரிப்பு பணிகளுக்கான தேவை இருக்காது. இறக்குமதி நிலக்கரியை அடிப்படையாக கொண்ட அனல் மின் நிலையங்கள் மார்ச் 16-ந் தேதி முதல் முழு உற்பத்தித் திறனுடன் இயங்குமாறு பிரிவு 11-ன் கீழ் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பு வைக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர் நிலக்கரியை பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்ல போதுமான ரயில் பெட்டிகள் கிடைப்பதை உறுதி செய்துள்ளார்.
உச்சக்கட்ட தேவையை சமாளிக்க வாயு அடிப்படையிலான மின்சாரம் பயன்படுத்தப்படும். ஏப்ரல், மே போன்ற பற்றாக்குறை காலங்களில் 5000 மெகாவாட் வாயு அடிப்படையிலான மின் நிலையங்களை இயக்குமாறு என்டிபிசி நிறுவனத்திற்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது கோடைக்காலத்தில். கூடுதலாக 4000 மெகாவாட் வாயு அடிப்படையிலான மின்திறனை மற்ற அமைப்புகள் மூலம் அதிகரிக்கப்படும். கோடை மாதங்களில் போதுமான அளவு வாயு விநியோகத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக கெய்ல் நிறுவனம் அமைச்சகத்திற்கு உறுதி அளித்துள்ளது. அடுத்த மாதத்தில் உற்பத்திக்குப் போதுமான அளவு தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் நடப்பு மாதத்தில் தண்ணீரை பயன்படுத்துமாறு அனைத்து புனல் மின் நிலையங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. புதிய நிலக்கரி சார்ந்த மின் நிலையங்கள் மூலமாக கூடுதலாக 2,920 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வகையில் மார்ச் மாதத்திற்குள் அவை நிறுவப்படும். இதற்கும் மேலாக பற்றாக்குறை காலத்தில் பாராவுனியில் தலா 110 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி அலகுகள் அமைச்சகத்தின் உத்தரவுபடி தயார் நிலையில் வைக்கப்படும்.
கோடை மாதங்களில் மின் தட்டுப்பாடு இல்லையென்பதை உறுதி செய்யுமாறு மின்சார நிறுவனங்களை மத்திய மின்சாரத்துறை அமைச்சர் இந்தக் கூட்டத்தின் போது கேட்டுக் கொண்டார். வரும் மாதங்களில் மின்சாரத் தேவையை சமாளிக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருமாறும் சம்பந்தப்பட்ட அனைவரையும் திரு.சிங் கேட்டுக் கொண்டார்.
***
AD/PKV/RR
(Release ID: 1905249)
Visitor Counter : 236