கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

சாகர்மாலா திட்டம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் சுற்றுலாப் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கிறது

தமிழ்நாடு, கர்நாடகத்தில் தலா 4 மிதக்கும் கப்பல் தளத்துக்கு அனுமதி

Posted On: 09 MAR 2023 10:12AM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம், நாட்டின் சமூகப் பொருளாதார சூழலை வலுப்படுத்த தனது சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பழமையான முறையில் நிரந்தர கப்பல் இறங்கு தரைகளை அமைப்பதற்குப் பதிலாக தனித்துவமான மிதக்கும் இறங்கு தளங்களை உருவாக்க அமைச்சகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை அதன் முக்கிய முன்முயற்சிகளில் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த மிதக்கும் இறங்கு தளங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும், நவீனத்துவம் மிக்கதாகவும் நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும் உள்ளன.

இதுவரை சாகர்மாலா திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் மொத்தம் 11 மிதவை இறங்கு தளங்களை அமைக்க அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தளங்கள் குருபுரா, நேத்ராவதி ஆறுகளில் அமைக்கப்பட்டு சுற்றுலா நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

கூடுதலாக தமிழ்நாட்டில் 4 மிதவை இறங்கு தளங்களுக்கு கொள்கை அடிப்படையில் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவின் ஆன்மீக தலமான ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களில் இவை அமைக்கப்பட உள்ளன. மேலும் கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய இடங்களிலும் இந்த இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த மிதவை இறங்கு தளங்கள் சுற்றுலாப் பயணிகள் தடையின்றியும், பாதுகாப்பாகவும் போக்குவரத்தை மேற்கொள்ளவும், கடலோர சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த மேம்பாட்டைக் கருத்தில் கொண்டும் அமைக்கப்படும்.

இது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால், “வலுவான இணைப்புகளை வழங்குவதற்கு நமது பிரதமர் உயர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இது இந்தியாவுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். மிதவை இறங்கு தளங்களை அமைப்பது, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பெரிதும் வழிவகுப்பதுடன் நீர் தொடர்பான சுற்றுலாவுக்கு புதிய வழிகளையும் உருவாக்கும். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், அந்தப் பிராந்தியத்தின் வர்த்தகமும் அதிகரிக்கும்” என்று கூறினார்.

 

*****



(Release ID: 1905206)

AD/PKV/RR

 



(Release ID: 1905218) Visitor Counter : 225