பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் நடைபெற்ற கப்பற்படை கமாண்டர்கள் மாநாட்டில், இந்தியக் கப்பற்படையின் செயல்திறன்கள் பற்றி பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு

Posted On: 06 MAR 2023 6:00PM by PIB Chennai

இந்தியாவின் முதலாவது உள்நாட்டு விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் 2023 மார்ச் 6 அன்று கப்பற்படை கமாண்டர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியக் கப்பற்படையின் செயல்திறன்கள் பற்றி பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். நாட்டின் கடல்சார்ந்த நலன்களைப் பாதுகாப்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பல பரிமாணச் செயல்பாடுகளுக்கு கப்பற்படையின் திறனை கடலில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்வையிட்ட பின், அவர் கப்பற்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடினார்.

துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் தேச நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருப்பதற்காகக் கப்பற்படையை தமது உரையின்போது பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். எதிர்கால  மோதல்கள் முன்கூட்டியே கணிக்க முடியாதவை. தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் உலக நிலை ராணுவ உத்திகளை மாற்றியமைக்க அனைவரையும் நிர்பந்திக்கிறது. வடக்கு மற்றும் மேற்கு எல்லைகள் மீது நிலையான கண்காணிப்புத் தேவைப்படுகிறது. அதேபோல் ஒட்டுமொத்த கடலோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு பராமரிக்கப்பட வேண்டும். எதிர்காலச் சவால்கள் எதுவாயினும் அவற்றைக் கையாள நாம் தயாராக இருக்க வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா போன்ற மிகப்பெரிய நாடு முழுமையும் தற்சார்பு உடையதாக இருக்க வேண்டும். அதன் பாதுகாப்புக்கு மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது என்பதையும் அவர் அறிவுறித்தினார். பாதுகாப்புத் தளவாடக் கொள்முதலுக்கான பட்ஜெட் என்பது 2023-24ல் 75% உள்நாட்டு தொழில்துறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற அண்மைக்கால அறிவிப்புபற்றி குறிப்பிட்ட அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தற்சார்புக்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு இதுவே சான்றாகும் என்றார்.

இந்த மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் ஸ்பாட்டர் ட்ரோன், தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் உயிர்காக்கும் படகு, தீயணைக்கும் படகு உள்ளிட்டவற்றை பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டார்.

***

AP/SMB/JS/RJ(Release ID: 1904655) Visitor Counter : 67


Read this release in: English , Urdu , Marathi , Hindi