பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படைத் தளபதிகளின் மாநாடு 23/1

Posted On: 05 MAR 2023 9:02AM by PIB Chennai

2023-ம் ஆண்டுக்கான கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் முதல் கட்டம் 2023  மார்ச் 6-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த மாநாடு கடற்படைத் தளபதிகள் மட்டத்தில் ராணுவ-பாதுகாப்பு உத்தி  போன்ற  முக்கிய விஷயங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்கும், அரசின் மூத்த அதிகாரிகளுடன் உரையாடுவதற்கும் ஒரு தளமாக செயல்படுகிறது.

 

இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில் புதுமை யாதெனில், கமாண்டர்கள் மாநாட்டின் முதல் கட்டம் கடலில், நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் நடைபெறவுள்ளது.

 

மாநாட்டின் தொடக்க நாளில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படைத் தளபதிகளுடன் உரையாற்றுகிறார். அடுத்தடுத்த நாட்களில் முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் ராணுவம், விமானப்படை, கடற்படைத் தளபதிகளுடன்  முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் சேவையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து உரையாடவுள்ளனர்.

 

கடற்படைத் தலைமை தளபதி மற்ற கடற்படைத் தளபதிகளுடன் இணைந்து கடந்த ஆறு மாதங்களில் இந்தியக் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய செயல்பாடுகள், உற்பத்தி செய்யப்பட்டத் தளவாடங்கள், மனிதவள மேம்பாடு, பயிற்சி மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்வதோடு, எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பார். . இந்த மாநாட்டின் போது, நவம்பர் 22-ம் தேதி இந்தியக் கடற்படையில் செயல்படுத்தப்பட்ட ‘அக்னிபாதை திட்டம்’ குறித்த தகவல் கடற்படைத் தளபதிகளுக்கு வழங்கப்படும்.

 

இந்தியாவின் வளர்ந்து வரும் கடல்சார் நலன்களுக்கு ஏற்ப பல ஆண்டுகளாக கடற்படை அதன் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தியக் கடற்படையானது, போருக்குத் தயாரான, நம்பகமான, ஒருங்கிணைந்த படையாக இருப்பதில் கவனம் செலுத்துகிறது.

 

***

AP/CR/DL



(Release ID: 1904352) Visitor Counter : 194