மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நான்காண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் (ITEP) 57 புகழ்பெற்ற மத்திய/மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள்/கல்வி நிறுவனங்களில் 2023-24 ஆம் ஆண்டு முதல் தொடக்கம்
Posted On:
04 MAR 2023 4:03PM by PIB Chennai
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) நாடு முழுவதும் உள்ள 57 ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் (TEIS) ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை (ITEP) 2023-24 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இது தேசிய கல்விக் கொள்கை 2020 இன் கீழ் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் முதன்மையானத் திட்டமாகும்.
ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் 26 அக்டோபர் 2021 அன்று அறிவிக்கப்பட்டபடி 4 ஆண்டுகளுக்கான இரட்டை பட்டங்களுக்கான முழுமையான இளங்கலை பட்டப்படிப்பு, பி ஏ. பி. எட்./ பி எஸ் சி.பி. எட். மற்றும் பி.காம். பி.எட் ஆகும். இந்தப் பாடநெறி புதிய பள்ளிக் கட்டமைப்பின் அடிப்படை, ஆயத்தம், நடுநிலை மற்றும் இடைநிலை (5+3+3+4) ஆகிய 4 நிலைகளுக்கு ஆசிரியர்களைத் தயார்படுத்தும். இத்திட்டம் முதன்முதலில் புகழ்பெற்ற மத்திய/மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள்/கல்வி நிறுவனங்களில் முன்னோடி முறையில் வழங்கப்படுகிறது. இடைநிலை வகுப்புகளுக்குப் பிறகு விருப்பப்படி கற்பித்தலைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் சாத்தியமாகும். தற்போதைய பி.எட்.க்கு தேவையான 5 ஆண்டுகளை விட 4 ஆண்டுகளில் படிப்பை முடிப்பதன் மூலம் ஒரு வருடத்தை மிச்சப்படுத்துவதால் இந்த ஒருங்கிணைந்த பாடநெறி மாணவர்களுக்கு பயனளிக்கும் சிறந்த திட்டம் ஆகும். அதற்கான சேர்க்கை தேசிய பொது நுழைவுத் தேர்வு (NCET) மூலம் தேசியத் தேர்வு முகமையால் (NTA) மேற்கொள்ளப்படும்.
ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டமானது (ITEP) அதிநவீன கற்பித்தலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஆரம்பகாலக் குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE), அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் (FLN), உள்ளடக்கிய கல்வி, இந்தியாவின் மதிப்புகள்/நெறிமுறைகள்/கலை/மரபுகள் பற்றிய புரிதல் ஆகியவற்றிலும் ஓர் அடித்தளத்தை நிறுவும். ஆசிரியர் கல்வித் துறையின் மறுமலர்ச்சிக்கு இந்தப் பாடநெறி கணிசமான பங்களிப்பை வழங்கும். இந்திய விழுமியங்கள் மற்றும் மரபுகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்குமுறைச் சூழலில் இந்தப் பாடத்திட்டத்தில் பயின்று வரும் வருங்கால ஆசிரியர்கள் 21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய தரத்தின் தேவைகளுக்கேற்ப இருப்பார்கள். ஆகவே புதிய இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இவர்கள் முன்னோடிகளாகத் திகழ்வார்கள்.
***
AP/CJL/DL
(Release ID: 1904237)
Visitor Counter : 540