பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுற்றுலாவை தீவிர இயக்கமாக மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

“இந்த இணையவழிக் கருத்தரங்குகள் பட்ஜெட்டின் போது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் ஊக்க சக்தியாக செயல்படும்”

“சுற்றுலாத் துறையில் புதிய உயரங்களை எட்ட முன்னோக்கிய சிந்தனைகளுடன் யோசித்து திட்டமிட வேண்டும்”

“சுற்றுலா என்பது பணக்காரர்கள் தொடர்பான உயர் ஆடம்பர வார்த்தை அல்ல”

“சுற்றுலாத் தலங்களின் முழுமையான மேம்பாட்டுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது”

“வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் காசி விஸ்வநாதர் ஆலயம், கேதார்தாம், பாவகத் ஆகிய இடங்களுக்கு பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது”

“ஒவ்வொரு சுற்றுலாத் தலமும் தனது சொந்த வருவாய் ஆதாரங்களை உருவாக்க முடியும்”

“உள்கட்டமைப்பு மேம்பாடுகள் காரணமாக நமது கிராமங்கள் சுற்றுலா மையங்களாக மாறி வருகின்றன”

“கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு 8 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்”

“அதிகம் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்தியா ஏராளமான சலுகைகளை வழங்குகிறது”

“வேளாண்மை, ரியல் எஸ்டேட் மேம்பாடு, உள்கட்டமைப்பு, ஜவுளி போன்ற துறைகளைப் போலவே சுற்றுலாத் துறையும் அதே அளவு ஆற்றல் கொண்டது”

Posted On: 03 MAR 2023 11:52AM by PIB Chennai

சுற்றுலாவை தீவிர இயக்கமாக மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மத்திய பட்ஜெட் 2023ல் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்துவது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்கும் விதமாக மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 12 இணையவழிக் கருத்தரங்குகளில் இது 7-வது ஆகும்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், புதிய இந்தியா தற்போது புதிய பணிக் கலாச்சாரத்துடன் முன்னோக்கிச் செல்வதாகக் கூறினார். இந்தாண்டு பட்ஜெட்டுக்கு மக்கள் பெரிய வரவேற்பு அளித்துள்ளதற்கு அவர், மகிழ்ச்சி தெரிவித்தார். முன்பு பட்ஜெட்டுக்கு பின்னர், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விவாதிக்கும் கலாச்சாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தற்போது, இந்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகளை அரசு,  ஆலோசனை கேட்கும் உணர்வுடன் புதுமையான முறையில் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினார். இந்த இணையவழிக் கருத்தரங்குகளின் நோக்கம், பட்ஜெட்டின் செயல்திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்துவதுதான் என்று அவர் தெரிவித்தார். பட்ஜெட்டின் போது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் உந்து சக்தியாக இந்த இணையவழிக் கருத்தரங்குகள் அமையும் என்றும் அவர் கூறினார். அரசு தலைமைப் பொறுப்பின் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியுள்ள அனுபவம் குறித்து பேசிய பிரதமர், அரசு எடுக்கும் எந்தவொரு உத்தி ரீதியான முடிவுகளுடனும் சம்பந்தப்பட்டவர்கள் தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் அதன் பலன்கள் எட்டப்படும் என்றார். இதுவரை நடத்தப்பட்ட பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகளின் மூலம் பெறப்பட்டுள்ள ஆலோசனைகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் சுற்றுலாத் துறையை புதிய உயரத்திற்கு எடுத்துச்செல்ல முன்னோக்கிய சிந்தனைகளுடன் யோசித்துத் திட்டமிட்ட முறையில் செயலாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒரு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தும்போது பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அந்த இடத்தில் ஆற்றல் வளம், அந்த இடத்திற்கு பயணிப்பதை எளிதாக்குவது, அந்த இடத்தைப் பிரபலப்படுத்த புதிய வழிகளைக் கையாளுவது போன்ற நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இந்த அளவீடுகள் எதிர்காலத் திட்டங்களைத் தயாரிப்பதற்கு உதவியாக அமையும் என்று அவர் கூறினார். நாட்டில் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். கடற்கரைச் சுற்றுலா, மாங்குரோவ் வனச் சுற்றுலா, இமயமலைச் சுற்றுலா, சாகசச் சுற்றுலா, வனவிலங்குகள் சுற்றுலா, சூழல் சுற்றுலா, பாரம்பரியச் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா, திருமணங்களுக்கு ஏற்றத் தலங்கள், மாநாடுகள் மூலமானச் சுற்றுலா, விளையாட்டுச் சுற்றுலா போன்ற பல வகைகள் உள்ளதாக அவர் எடுத்துரைத்தார். இராமயணம் தொடர்பான சுற்றுலா இடங்கள், பௌத்தம் தொடர்பான சுற்றுலாத் தலங்கள், கிருஷ்ணர் தொடர்பான சுற்றுலா இடங்கள், வடகிழக்கு மாநில சுற்றுலாத் தலங்கள், மகாத்மா காந்தி தொடர்பான சுற்றுலா இடங்கள், துறவிகள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகள் போன்றவற்றின் மேம்பாட்டுக்காக இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சுற்றுலாத் துறையில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரும் விரிவான விவாதங்களை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.

சுற்றுலா என்பது உயர் வருமானம் கொண்ட பிரிவினருக்கான வார்த்தை என்ற ஒரு பொய்யான தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது தவறானது என்றும் பிரதமர் கூறினார். புனித யாத்திரைகள் இந்திய கலாச்சார மற்றும் சமூக வாழ்வியலில் பல நூற்றாண்டுகளாக ஒரு அங்கமாகத் திகழ்கின்றன என்று அவர் தெரிவித்தார். தங்களிடம் எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லாத போதும்கூட மக்கள் புனித யாத்திரைகள் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார். சார்தம் யாத்திரை, துவதாஷ் ஜோதிர்லிங்க யாத்திரை, 51 சப்த கீத யாத்திரை உள்ளிட்டவற்றை உதாரணமாகக் கூறிய பிரதமர் இந்த இடங்கள் ஆன்மீக நம்பிக்கையுடன் தலங்களை இணைப்பதுடன் நாட்டின் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதாக தெரிவித்தார். பல பெரிய நகரங்களின் முழுமையான பொருளாதாரம் இது போன்ற யாத்திரைகளைச் சார்ந்தே இருப்பதை அவர் குறிப்பிட்டார். பழங்கால பாரம்பரிய யாத்திரைகளை ஊக்குவிக்கும் வகையில் காலத்திற்கேற்ற வசதிகள் செய்யப்படாமல் இருந்தது வருத்தத்திற்குரியது என்று அவர் கூறினார். சில நூற்றாண்டுகள் அடிமைத்தனத்தில் இருந்த காரணத்தினாலும், சுதந்திரத்திற்குப் பின்னர் அரசியல் புறக்கணிப்புகளாலும், தேசத்திற்கு சேதங்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். தற்போதைய இந்தியா இந்த நிலைகளை மாற்றி அமைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வசதிகள் அதிகரிக்கப்படும்போது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஈர்ப்பும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மறு சீரமைக்கப்படுவதற்கு முன்பு ஆண்டுக்கு 80 லட்சம் பேர் அந்த ஆலயத்திற்கு  வந்து சென்றதாகவும் புதுப்பிக்கப்பட்ட பின்பு கடந்த ஆண்டு இந்த ஆலயத்திற்கு 7 கோடி பேர் வந்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார். கேதார்நாத் ஆலயத்தில் மறு கட்டுமானத்துக்கு முன்பு ஆண்டுக்கு 4 முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்ததாகவும், ஆனால் அதன் பின்பு இந்த எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். இதேபோல் குஜராத்தின் பாவ                                                                                                                                                கத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்டுமானத்திற்கு முன்பு 4000 முதல் 5000 பேர் மட்டுமே வருகை தந்ததாகவும், தற்போது 80,000 ஆன்கமீக சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதாகவும் அவர் கூறினார். வசதிகள் அதிகரிக்கும்போது நேரடித் தாக்கம் ஏற்பட்டு  சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும், சுய வேலைவாய்ப்புகளும் மேலும் உயரும் என்று அவர் குறிப்பிட்டார். ஒற்றுமைக்கான சிலை குறித்தும் குறிப்பிட்ட பிரதமர், உலகிலேயே மிகப் பெரிய இந்த சிலையைப் பார்க்க, அது திறக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 27 லட்சம் பேர் வந்ததாகக் கூறினார். வளர்ந்து வரும் உள்ளூர் வசதிகள், சிறந்த டிஜிட்டல் இணைப்பு நல்ல உணவகங்கள் மற்றும் மருத்துவமனைகள், தூய்மையான இடங்கள் மற்றும் உயர்தரமான உள்கட்டமைப்பு ஆகியவை அதிகரித்து வரும் நிலையில் இந்திய சுற்றுலாத்துறை பல மடங்கு வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

குஜராத்தின் அகமதபாத்தில் கன்காரியா ஏரி மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஏரியின் மறுசீரமைப்புப் பணிகளைத் தாண்டி உணவகங்களில் பணிபுரிவோருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தூய்மையாகவும் நவீன உள்கட்டமைப்புடன் திகழும் இந்த இடத்திற்கு தினமும் 10,000 பேர் வந்து செல்வதாகவும், நுழைவுக் கட்டணமாக நியாயமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு சுற்றுலாத் தலமும் வருவாய்க்கான சொந்த செயல்திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

நமது கிராமங்களும் தற்போது சுற்றுலா மையங்களாக மாறி வருகின்றன என்று அவர் கூறினார். உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தொலைதூர கிராமங்களும் சுற்றுலாத் தலங்களாக மாறி இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். எல்லைப் புறங்களில் உள்ள கிராமங்களின் மேம்பாட்டுக்காக துடிப்பான கிராமங்கள் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த கிராமங்களில்  சிறிய உணவகங்கள், தங்குமிடங்கள் போன்றவற்றை ஏற்படுத்த ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டிய அவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு 2 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்ததாகக் கூறினார். இந்தாண்டு ஜனவரி மாதத்தில் 8 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது போன்ற அதிகம் செலவழிக்கும் தன்மை கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கான உத்திகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சராசரியாக 1700 டாலர் தொகையை செலவிடுவதாக கூறிய அவர், அமெரிக்காவுக்குச் செல்லும் பிற நாட்டு சுற்றுலாப் பயணிகள் 2500 டாலரையும், ஆஸ்திரேலியாவுக்குச் செல்வோர் 5000 டாலரையும் செலவிடுவதாக குறிப்பிட்டார். ஒவ்வொரு மாநிலமும் இது போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு சுற்றுலா கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பறவை ஆர்வலர்கள் பல மாதங்களுக்கு நமது நாட்டில் தங்கியிருப்பதை உதாரணமாகக் கூறிய பிரதமர் இது போன்ற சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சுற்றுலாத் துறையில் உள்ள சவால்களை எடுத்துரைத்த பிரதமர், தொழில் முறையிலான சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பற்றாக்குறை உள்ளது என்றார். உள்ளூர் கல்லூரிகளில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். குறிப்பிட்ட சுற்றுலாத் தலத்தில் உள்ள வழிகாட்டிகள், குறிப்பிட்ட ஆடைகள் அல்லது சீருடைகளை அணியலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக சுற்றுலா வழிகாட்டிகளை அடையாளம் கண்டு கொள்ள இயலும் என்றும் அவர் கூறினார். சுற்றுலாப் பயணிகளின் மனம் முழுவதும் கேள்விகளால் நிறைந்திருக்கும் என்று கூறிய அவர், அவை அனைத்துக்கும் விடைகளை வழங்கி சுற்றுலா வழிகாட்டிகள் உதவ வேண்டும் என்றார்.

பள்ளி மற்றும் கல்லூரி சுற்றுலாக்களின் போது வடகிழக்கு மாநிலங்களில் பயணங்களை மேற்கொள்ளும் சுற்றுலா திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் அனைவருக்கும் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்று அவர் கூறினார். திருமணச் சுற்றுலா இடங்கள் மற்றும் விளையாட்டு சுற்றுலா இடங்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இது போன்ற 50 சுற்றுலாத் தலங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இவை உலகெங்கிலும் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாக அமைந்திருக்க வேண்டும் என்றார். ஐநா மொழிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் சுற்றுலாத் தலங்கள் தொடர்பான செயலிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த இணையவழிக் கருத்தரங்கம் சுற்றுலாவில் ஒவ்வொரு அம்சத்தையும் தீவிரமாக பரிசீலித்து சிறந்தத் தீர்வுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார். வேளாண்மை, ரியல் எஸ்டேட் மேம்பாடு, உள்கட்டமைப்பு, ஜவுளி போன்ற துறைகளுக்கு உள்ள அதே ஆற்றல் சுற்றுலாத் துறைக்கும் உள்ளது என்று கூறி பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

***

AP/PLM/SG/KPG

Release ID: 1903827


(Release ID: 1903936) Visitor Counter : 209