வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் மற்றும் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை இரண்டும் வணிகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெருமளவு உதவும்: மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல்

Posted On: 02 MAR 2023 2:35PM by PIB Chennai

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் மற்றும் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை இரண்டும் வணிகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெருமளவு உதவும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் கூறியுள்ளார். புதுதில்லியில் இந்திய வர்த்தக சபையில் நடைபெற்ற விரைவு சக்தி பெருந்திட்டம் தொடர்பான தேசிய கருத்தரங்கில் இன்று உரையாற்றிய அவர், விரைவு சக்தி பெருந்திட்டமும் சரக்குப் போக்குவரத்துக் கொள்கையும் நாட்டில் முதலீடுகளை அதிகரித்துப் போட்டித் தன்மையை மேம்படுத்தும் என்றார்.

புதுமைக் கண்டுபிடிப்புகளில் முன்னணி நாடாக இந்தியாவை உலகம் அங்கீகரித்துள்ளது என்று அவர் கூறினார். சிறந்த நிர்வாகம், மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துதல், வர்த்தகம் புரிதலை எளிமைப்படுத்துதல் போன்றவற்றிற்காக புதிய நடைமுறைகள் விரைந்து மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயல்திட்டம் இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இது நாட்டின் பொருளாதாரத்தில் மிகச் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 7.28 பில்லியன் என்ற எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தில் 1300 தகவல் அடுக்குகள் உள்ளதாகவும், காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், நதிகள், யுனெஸ்கோ பாரம்பரிய இடங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமரின் விரைவு சக்தி திட்டம் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சமூக உள்கட்டமைப்பு அமைப்புகள் தொடர்பான நடவடிக்கைகளைத் திட்டமிடவும், உதவுவதாக அவர் கூறினார்.

12 மாநிலங்கள், நில ஆவணத் தகவல்களை டிஜிட்டல் மையமாக்கியிருப்பதாகவும் இந்த நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் குறைவாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், வளர்ந்த இந்தியாவுக்கான இலக்குகளை அடைய இதுவும் முக்கியமானது என்றார். அந்த வகையில், பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் சரக்குப் போக்குவரத்து செலவுகளை பெருமளவு குறைக்கும் என்று அவர் கூறினார்.

கல்வி, சுகாதாரம், உணவு, இருப்பிடம் அனைத்தும் மக்களுக்குத் தரமான முறையில் கிடைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்தியாவை உலக நாடுகள் உற்று நோக்குவதாகவும், உலகளாவிய சிக்கல்களுக்கும், சவால்களுக்கும் தீர்வை ஏற்படுத்தும் தன்மையுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாகவும் திரு. பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 

***

AP/PLM/SG/KPG

 



(Release ID: 1903645) Visitor Counter : 189