பாதுகாப்பு அமைச்சகம்

ரூ. 3,100 கோடியில் கடற்படை வீரர்களுக்கான 3 பயிற்சிக் கப்பல்களை வாங்க எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 01 MAR 2023 6:31PM by PIB Chennai

கடற்படை வீரர்களுக்கான 3 பயிற்சிக் கப்பல்களை வாங்க  லார்சன் & டப்ரோ (எல்&டி) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  ரூ.3,108.09 கோடி செலவில் வாங்கப்படவுள்ள இந்தக் கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைத்து மேம்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படுவது (இந்திய-ஐடிடிஎம்) என்ற பிரிவின் கீழ் வாங்கப்பட உள்ளன. இந்தக் கப்பல்களை 2026-ம் ஆண்டு முதல் எல்&டி நிறுவனம் வழங்கத் தொடங்கும். 

இந்தக் கப்பல்கள் கடற்படையில் பெண்கள் உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகளின் பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.  ராஜ்ய உறவுகளை வலுப்படுத்தும் விதமாக நட்பு நாடுகளின் வீரர்களுக்கும் இந்தக் கப்பல் மூலம் பயிற்சியளிக்கப்படும்.  பேரிடர் மீட்புப்பணிகளின் போது, மக்களை மீட்பது மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காகவும் இந்தக் கப்பல்கள் பயன்படுத்தப்படும்.

சென்னை காட்டுப்பள்ளி எல்&டி கப்பல்கள் கட்டும் தளத்தில் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு இந்தக் கப்பல்கள் கட்டமைக்கப்படும்.  இந்தத் திட்டம் நான்கரை ஆண்டுகளில் 22.5 லட்சம் மனித நாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும்.  இந்திய கப்பல் கட்டும் துறையில் உள்ள நிறுவனங்கள், அது தொடர்பான குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு இத்திட்டம் அதிக வாய்ப்புகளை அளித்து  ஊக்கவிக்கும். இந்தக் கப்பல்களுக்கான பெரும்பாலான உபகரணங்கள் உள்நாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படுவதால் மத்திய அரசின் முன்முயற்சியான தற்சார்பு இந்தியா மற்றும் மேக்-இன் இந்தியா திட்டங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும்.   

***

 

AP/PLM/RJ/KPG



(Release ID: 1903477) Visitor Counter : 171