தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
31-வது புதுதில்லி உலக புத்தகக் கண்காட்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பதிப்புப் பிரிவு தனது புத்தகங்கள் மற்றும் இதழ்களைக் காட்சிப்படுத்தியுள்ளது
Posted On:
25 FEB 2023 5:03PM by PIB Chennai
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளியீட்டு அமைப்பான பதிப்புப் பிரிவு தனது மிகச் சிறந்த புத்தகங்கள் மற்றும் இதழ்களின் தொகுப்பை 31-வது புதுதில்லி உலக புத்தகக் கண்காட்சியில் இடம் பெறச் செய்துள்ளது. நம் நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த புத்தகக் கண்காட்சியில் புதுதில்லி புத்தகக் கண்காட்சி நிகழ்வு ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 9 நாள் புத்தகக் கண்காட்சி இன்று (பிப்ரவரி 25) தொடங்கி மார்ச் 5-ந் தேதி வரை புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற மத்திய அரசின் நிறுவனமான தேசிய புத்தக அறக்கட்டளை, இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.
சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா-வைக் குறிக்கும் புத்தகத் தொகுப்பை பதிப்பகத்துறை காட்சிக்கு வைத்துள்ளது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் மற்றும் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றி இதன் மூலம் நன்கு அறிந்து கொள்ளலாம். இந்தப் புத்தகக் கண்காட்சியில் வரலாறு, கலை, கலாச்சாரம், காந்திய இலக்கியம், நிலம், மக்கள், ஆளுமைகள், சுயசரிதைகள், சினிமா, குழந்தை இலக்கியம் மேலும் பல்வேறு முக்கியத் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர குடியரசுத் தலைவர் மாளிகை தொடர்பான புத்தகங்கள், குடியரசுத் தலைவர்கள், குடியரசுத் துணைத் தலைவர்கள், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களின் உரைகள் அடங்கிய நூல்களும் இடம் பெற்றுள்ளன. பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் மூலம் வாசகர்கள் இந்தியாவின் வளமான கலாச்சார மதிப்பையும் முக்கியமான பிரச்சனைகளில் இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்தும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
புத்தகங்களைத் தொடர்ந்து பதிப்புப் பிரிவின் முன்னணி இதழ்களான யோஜனா, குருஷேத்ரா மற்றும் ஆஜ்கல் போன்றவைகளும் புத்தக விற்பனை நிலையங்களில் கிடைக்கும். பிரபல குழந்தைகள் இதழான பாலபாரதியும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் மன் கி பாத் உரைகள் தொடர்பான சிறு புத்தகங்களும் பதிப்புப் பிரிவு அரங்கில் கிடைக்கும்.
பதிப்புப் பிரிவு தனது புத்தகங்கள் மற்றும் இதழ்களை, "விற்பனை அரங்க எண் 171-186, அறை எண். 5, பிரகதி மைதானம், புது தில்லி" என்ற முகவரியில் காட்சிப்படுத்தியுள்ளது.
***
SRI / PLM / DL
(Release ID: 1902391)
Visitor Counter : 170