ஜவுளித்துறை அமைச்சகம்

அதிக அளவிலான, தரமான மற்றும் விரைவான ஜவுளி உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்: டெக்னோடெக்ஸ் 2023 மாநாட்டில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் உரை

Posted On: 24 FEB 2023 1:36PM by PIB Chennai

அதிக அளவிலான, தரமான மற்றும் விரைவான ஜவுளி உற்பத்தியில் இந்திய ஜவுளி உற்பத்தித் துறையினர் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்ற டெக்னோடெக்ஸ் 2023 மாநாட்டின் முக்கிய அமர்வில் இன்று உரையாற்றிய அவர், உலகச் சந்தைகளை நாம் கைப்பற்ற இது சரியான நேரம் என்று கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் தடையற்ற ஒப்பந்தம் கடந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனுடனும் வேறு சில நாடுகளுடனும்  இந்த ஒப்பந்தம் தொடர்பாக  இந்தியா பேச்சு நடத்தி வருவதாக அவர் கூறினார்.

பெரிய நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஜவுளித்துறையில் பெருகி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  தொழில்நுட்ப ஜவுளித்துறையில்  இந்தியாவின் பங்களிப்பு 2.5 சதவீதமாக உள்ளது என்று கூறிய அவர், இதை 12 சதவீதம் வரை உயர்த்த முடியும் என்று தெரிவித்தார்.  இத்துறை 200 பில்லியன் டாலர் மதிப்புடைய துறையாக மாறுவதற்கான  வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியா ஜி-20 தலைமைத்துவத்தைப் பயன்படுத்தி ஜவுளித்துறையில் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று அந்தத் துறையினரை அவர் கேட்டுக் கொண்டார்.

தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ், திறன் மேம்பாட்டுடன் கூடிய பிரதமரின் சமர்த் திட்டத்தை ஜவுளித் தொழில்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திரு பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

***

AP/PLM/KPG/KRS

 



(Release ID: 1902082) Visitor Counter : 199


Read this release in: English , Urdu , Hindi , Marathi