மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்டின் அரசு கோழிப்பண்ணையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை ஆய்வு செய்ததில், பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது: ஐசிஏஆர்

Posted On: 23 FEB 2023 10:32AM by PIB Chennai

ஜார்க்கண்டில் உள்ள அரசு கோழிப்பண்ணையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை,  மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள தேசிய கால்நடை நோய்த் தடுப்பு நிறுவனத்தின் ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில், எச்5என்1 எனப்படும் பறவைக்காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரி 17-ந் தேதி எடுக்கப்பட்ட மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்ட் முழுவதும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு 2023 பிப்ரவரி 20-ந் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  கடந்த 2019-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் கடைசியாக பறவைக் காய்ச்சல் வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான அதிரடித் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மத்திய கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் இரு உறுப்பினர்களைக் கொண்ட மத்தியக் குழு அமைக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல் அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளையும், மனிதர்களுக்கு நோய் பரவல் தடுப்பை கண்காணிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் மத்தியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய கால்நடைப் பராமரிப்புத்துறை செயலாளர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் அத்துறை செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நோய்ப் பரவலைத் தடுக்கும் மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். இதே போல் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, மத்திய கால்நடைப் பராமரிப்புத்துறை ஆணையர், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநில கால்நடைப் பராமரிப்புத்துறை செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மெய்நிகர் கூட்டத்தில் இவ்விரு மாநில உயரதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார்.

பறவைக் காய்ச்சல் பாதிப்பை எதிர்கொண்ட கோழிகள், முட்டைகள், கிருமி பரவிய தீவனங்கள் ஆகியவற்றை தீயிட்டு அழிக்குமாறு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீடு கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு (எல்எச் & டிசிபி) திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் தலா 50 சதவீத பங்களிப்புடன் வழங்கப்படும்.

அதே நேரத்தில் பறவைக் காய்ச்சல் நோய்ப் பரவலை கண்டறிவதற்கான பரிசோதனை பிபிஇ கிட்களை (PPE kits) போதுமான அளவுக்கு கையிருப்பு வைக்குமாறும் மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.  

மாநில அரசுகள் தங்களது பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அன்றாட அறிக்கையை மத்திய கால்நடை பராமரிப்புதுறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதே நேரத்தில்  நோய்த் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சூழல் குறித்து மாநில அரசு அதிகாரிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல் மூலம்  மத்திய கால்நடைப் பராமரிப்பு துறை கேட்டறியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***

(Release ID: 1901612)

AP/ES/AG/KRS

 




(Release ID: 1901710) Visitor Counter : 149


Read this release in: English , Urdu , Hindi , Telugu