அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தூய எரிசக்தித்துறையில் பிரான்ஸ் தனது நீடித்த ஒத்துழைப்பை அளிக்க முன்வருமாறு இந்தியா அழைப்பு
Posted On:
23 FEB 2023 8:56AM by PIB Chennai
தூய எரிசக்தித்துறையில் பிரான்ஸ் தனது நீடித்த ஒத்துழைப்பை அளிக்க முன்வருமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் மின்சார வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிசக்தி மூலம் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகள் மற்றும் சூரியசக்தியில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறை நான்காவது இடத்தில் உள்ளது.
இந்தியா மற்றும் பிரான்ஸ் சார்பில் புதுதில்லியில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய ஆய்வகத்தில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தூய மற்றும் நீடித்த எரிசக்தி தொழில்நுட்பங்கள் சார்ந்த கருத்தரங்கத்தை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது 2022-ம் ஆண்டில் 100 ஜிகாவாட்ஸ் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்ததை நினைவுகூர்ந்தார். தார் பாலைவனம் சூரிய சக்தி மின்சாரத்திற்கான மிகப்பெரிய வளமாக இருப்பதாகவும், அங்கிருந்து 2100 ஜிகாவாட்ஸ் வரையிலான சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். மத்திய அரசின் தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின் படி 2030-ம் ஆண்டிற்குள், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பையும், டீசலில் 5 சதவீதம் உயிரி- டீசல் கலப்பையும் வெற்றிகரமாக செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் டாக்டர் எஸ் சந்திரசேகர் தெரிவித்தார்.
அதே போல் தூய எரிசக்தி ஆராய்ச்சியில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பையும், முதலீடுகளையும் இந்தியா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். இதற்கான சாதக அம்சங்கள் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என்று டாக்டர் எஸ் சந்திரசேகர் தெரிவித்தார்.
***
SRI/ES/AG/RR
(Release ID: 1901637)
Visitor Counter : 145