விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டவும், கிராமங்களை செழிப்பாக மாற்றவும் மாணவர்களும், இளைஞர்களும் பங்களிக்க வேண்டும் – திரு தோமர்

Posted On: 19 FEB 2023 3:33PM by PIB Chennai

ஜெய்ப்பூரில் உள்ள சவுத்ரி சரண் சிங் தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனம், வேளாண் துறையில் புத்தாக்க நடவடிக்கை மற்றும் செயல்பாட்டு மையத்தின் வேளாண் வணிக மேலாண்மையின் நான்காவது பட்டமளிப்பு விழாவை இன்று (19.02.2023) மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் திரு கைலாஷ் சவுத்ரி கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் மூலம் மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக திரு தோமர் தெரிவித்தார்.

நாட்டில் விவசாயத் துறைக்கு அதிக நன்மைகளை கொண்டு வரவும், கிராமங்களை மேலும் செழிப்புடன் மாற்றவும், விவசாயத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் பங்களிக்க வேண்டும் என்றார்.

தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் கூடுதலாக 60 இடங்களைச் சேர்ப்பதாகவும், விடுதியில் கட்டாயம் தங்குவதற்கான விதியை ரத்து செய்வதாகவும் அவர் அறிவித்தார்.

”விவசாயத் துறை முக்கியமானது. அதில் அனைவரின் ஆர்வம் அதிகரிக்க வேண்டும்.  இளைஞர்களும் அதை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும்.  இது நம் அனைவரின் பொறுப்பு என்று மத்திய அமைச்சர் திரு தோமர் கூறினார். விவசாயத் துறையில் வாழ்வாதாரம் உள்ளது. விவசாயிகளின் தேசபக்தியும் உள்ளது.  ஏனென்றால் விவசாய உற்பத்தி இல்லாமல் அனைத்தும் நின்றுவிடும். விவசாயத் துறையில் பல சவால்கள் உள்ளன.  மத்திய அரசு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மாநிலங்களின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. இலாபகரமான பயிர்களை நோக்கி நகர்தல், பயிர்களை பல்வகைப்படுத்துதல், விளைபொருள் விற்பனையில் இடைத்தரகர்களை ஒழித்தல் போன்ற பல சவால்கள் திட்டமிட்ட முறையில் கையாளப்பட்டு வருகின்றன.

விவசாயத் துறையில் விஞ்ஞானிகள் பல பணிகளைச் செய்துள்ளதாகவும், விவசாயிகளின் அயராத உழைப்புடன், மத்திய அரசு விவசாயிகளுக்கு  ஏற்றவகையிலான பொருத்தமான  கொள்கைகளால் விவசாயத்தில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் திரு தோமர் கூறினார்.

 

பெரும்பாலான விவசாய விளைபொருட்களைப் பொறுத்தவரையில், இந்தியா இன்று உலகில் முதலிடத்தில் அல்லது இரண்டாவது இடத்தில் உள்ளது.  அதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னணிக்கு கொண்டு வர வேண்டும். இந்தியாவிடமிருந்து உணவு தானியங்கள் குறித்து உலகம் நிறைய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது.  அதை நாம் நிறைவேற்றி வருகிறோம்.  எதிர்காலத்திலும் அதைச் செய்வோம். விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் மத்திய அரசின் சீரிய முயற்சிகளால் வேளாண் ஆராய்ச்சி தொடர்ந்து திறன்பட நடைபெற்று வருகிறது. 

வாழ்வாதாரத்திற்கு வேலைகள் அவசியம்.  ஆனால் அதே நேரத்தில் விவசாயத் துறையை மேம்படுத்துவதும் அவசியம். ஏனெனில் நாட்டின் 56 சதவீத மக்கள் அதை நம்பியிருக்கிறார்கள் என்றார்.

***

AP  / GS  / DL



(Release ID: 1900561) Visitor Counter : 189