வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2022-23 பருவத்தில் கர்நாடகாவில் உள்ள ஏல தளங்களில், பதிவு செய்யப்பட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான புகையிலையையும், பதிவு செய்யப்படாத விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத புகையிலையையும் எந்த அபராதமும் இல்லாமல் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது
Posted On:
18 FEB 2023 1:33PM by PIB Chennai
2022-2023 கர்நாடக பயிர்ப் பருவத்தில் உற்பத்தி குறைந்ததைக் கருத்தில் கொண்டு, பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான புகையிலை மற்றும் பதிவு செய்யப்படாத விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத ஈரப்பதம் நீக்கி வெப்பமூட்டப்பட்ட வர்ஜீனியா புகையிலை (flue cured Virginia tobacco - FCV tobacco) ஆகியவற்றை எந்த அபராதமும் இல்லாமல் விற்பனை செய்ய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பரிசீலித்து அனுமதித்துள்ளார்.
கர்நாடகாவில், இந்த பயிர் பருவத்தில், 40,207 விவசாயிகள் 60,782 ஹெக்டேர் பரப்பளவில் எஃப்.சி.வி. புகையிலையை பயிரிட்டனர். 2022 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக, கர்நாடகாவில் எஃப்.சி.வி. புகையிலையின் மொத்த உற்பத்தி அளவு குறைந்தது. அது புகையிலை வாரியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கான 100 மில்லியன் கிலோ என்ற அளவை விட குறைவாக 59.78 மில்லியன் கிலோவாக மட்டுமே இருந்தது.
கூடுதல் எஃப்.சி.வி புகையிலை விற்பனைக்கு அபராதம் விதிக்கப்படாது என்ற முடிவு, இந்தப் பயிர்ப் பருவத்தில் உற்பத்தி குறைந்ததால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்கு கர்நாடக விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். குறைந்த உற்பத்தி மற்றும் குறைந்த வருமானம் காரணமாக எஃப்.சி.வி, புகையிலை பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த நடவடிக்கை கைகொடுக்கும். அத்துடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு இது பெரிதும் உதவும்.
***
AP / PLM / DL
(Release ID: 1900346)
Visitor Counter : 188