பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாள் விழாவைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 12 FEB 2023 4:50PM by PIB Chennai

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ் விரத் அவர்களே, ஆரிய பிரதிநிதி சபையின் சர்வதேசத் தலைவர் திரு சுரேஷ் சந்திர ஆரியா அவர்களே, தில்லி ஆரிய பிரதிநிதி சபையின் தலைவர் திரு தரம்பால் ஆரியா அவர்களே, திரு வினய் ஆரியா அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான கிஷன்ரெட்டி அவர்களே, மீனாட்சி லேகி அவர்களே, அர்ஜுன் ராம் மெக்வால் அவர்களே, பிரதிநிதிகளே, சகோதர சகோதரிகளே!

     மகரிஷி தயானந்த் அவர்களின் 200-வது பிறந்தநாள் விழா வரலாற்று சிறப்புமிக்கதோடு, எதிர்காலத்திற்கான வரலாற்றை எழுதும் வாய்ப்புமாகும். ஒட்டுமொத்த உலகத்திற்கான மனித குலத்தின் எதிர்காலத்திற்கு ஊக்கமளிக்கும் தருணமாக இது உள்ளது. மொத்த உலகத்தை சிறந்ததாக்க வேண்டும், சிறந்த சிந்தனைகள் மற்றும் மனிதாபிமான எண்ணங்களைப் பரவலாக்க வேண்டும் என்பது சுவாமி தயானந்த் அவர்களின் கோட்பாடாகும்.  உலகம் பல முரண்பாடுகளாலும், வன்முறை, உறுதியற்ற தன்மை போன்றவற்றாலும் சூழ்ந்துள்ள 21-ம் நூற்றாண்டில் மகரிஷி தயானந்த சரஸ்வதி காட்டிய பாதை கோடிக்கணக்கான மக்களிடையே நம்பிக்கையை விதைத்துள்ளது.

     மகரிஷி தயானந்த் அவர்களின் 200-வது ஆண்டுவிழாவை இரண்டு ஆண்டு காலத்திற்கு கொண்டாட ஆரிய சமாஜம் முடிவு செய்துள்ளது. அதேபோல், இந்த மகத்தான விழாவை கொண்டாடுவது என மத்திய அரசும் முடிவு செய்திருப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.  மகரிஷி தயானந்த் சரஸ்வதி அவர்கள் பிறந்த புனித பூமியில் பிறக்கும் வாய்ப்பை நானும் பெற்றிருப்பது மிகுந்த அதிர்ஷ்டம் என்று ஆச்சார்யா அவர்கள் கூறினார். அந்த பூமியில் நான் பெற்ற ஊக்கமும், மாண்புகளும் என்னை மகரிஷியின் சிந்தனைகளை நோக்கி ஈர்த்தன. சுவாமி தயானந்த் அவர்களின் பாதங்களில் மிகுந்த மரியாதையோடு நான் வணங்குகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

நண்பர்களே,

     சமூக வாழ்க்கையில் வேதங்களை புரிந்து கொள்வதில் மாற்றங்களைச் செய்தவர் மகரிஷி தயானந்த் அவர்கள். சமூகத்திற்கு அவர் வழிகாட்டுதல்களைத் தந்தார். இந்திய வேதங்களிலும், பாரம்பரியங்களிலும் குறைபாடுகள் இல்லை. ஆனால், அவற்றின் உண்மைத் தன்மையை நாம் மறந்துவிட்டோம். நமது வேதங்களுக்கு வெளிநாட்டினர் விளக்கங்கள் அளித்து அதை சிதைக்க செய்த முயற்சிகளை நினைத்துப் பாருங்கள்.  இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக தயானந்த் அவர்கள் இடையறாது பாடுபட்டார். சமூகப் பாகுபாடு, தீண்டாமை மற்றும் இதர சமூகத் தீமைகளுக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். “நமது சமூகம் சுவாமி தயானந்த் அவர்களுக்கு  பெரிதும் கடமைப்பட்டுள்ளது. தீண்டாமைக்கு எதிரான அவரது பிரகடனம் மிகப்பெரிய பங்களிப்பு” என்று தயானந்த் அவர்கள் பற்றி மகாத்மா காந்தி அவர்கள் தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானதாகும்.

சகோதர சகோதரிகளே,

     நமது வேதங்கள் வாழ்க்கையில் முழுமையான பாதை என்று மதத்தை வியாக்கியானம் செய்கிறது.  நம்மைப் பொறுத்தவரை மதம் என்பது கடமையை விளக்குவதாகும். அதாவது, பெற்றோர்களுக்கான, பிள்ளைகளுக்கான, தேசத்திற்கான கடமையை விளக்குவதாகும். இந்த அடிப்படையில் தமது வாழ்க்கைப் பாதையை சுவாமி தயானந்த் அமைத்துக் கொண்டது மட்டுமின்றி இந்த சிந்தனைகளை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல பல நிறுவனங்களை அமைத்தார். தமது வாழ்நாளில் புரட்சிகர சிந்தனைகளை நடைமுறைப்படுத்தினார். இந்த நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் பல ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்தன.

நண்பர்களே,   

     உலக நாடுகள் நம்மீது நம்பிக்கை வைத்து பொறுப்புணர்வு மிக்க ஜி-20 தலைமைத்துவத்தை நமக்கு வழங்கியிருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். ஜி-20-ன் சிறப்பு நிகழ்ச்சி நிரலாக சுற்றுச்சூழலை நாம் மேற்கொண்டுள்ளோம்.  இந்த முக்கியமான இயக்கத்தில் ஆரிய சமாஜம் சிறந்த பங்களிப்பை செய்யமுடியும்.  நமது தொன்மையான தத்துவத்துடன் கடமைகளையும், நவீன கண்ணோட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லும் பொறுப்பை நீங்கள் எளிதாக மேற்கொள்ள முடியும்.  

     நாட்டிற்காகவும், சமூகத்திற்காகவும் யாகங்களை ஆரிய சமாஜம் தொடர்ந்து நடத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சுவாமி தயானந்த் சரஸ்வதி அவர்களின் 200-வது ஆண்டுவிழா கொண்டாடப்படும் நேரத்தில், ஆரிய சமாஜத்தின் 150-வது ஆண்டுவிழா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதுதவிர, சுவாமி ஷ்ரதானந்தா அவர்களின் 100-வது நினைவுநாளும் வரவிருப்பதாக ஆச்சார்யா அவர்கள் குறிப்பிட்டார்.  இது மூன்று நதிகளின் சங்கமம் போல இருக்கிறது. இந்நிலையில், தயானந்த் அவர்களின் சிந்தனைகள் இந்தியாவிற்கும், அதன் கோடிக்கணக்கான மக்களுக்கும் ஊக்கமளிக்கட்டும். இத்தருணத்தில் ஆச்சார்ய பிரதிநிதிகள் சபையின் ஆளுமைகளுக்கு நான் வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.

மிக்க நன்றி. 

***

(Release ID: 1898517)

SRI/SMB/UM/RR



(Release ID: 1899089) Visitor Counter : 126