குடியரசுத் தலைவர் செயலகம்

உத்தரப் பிரதேசத்தின் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு-2023 -ன் நிறைவு விழாவில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார்

Posted On: 12 FEB 2023 5:45PM by PIB Chennai

லக்னோவில் இன்று (பிப்ரவரி 12, 2023) நடைபெற்ற உத்தரப் பிரதேசத்தின் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு-2023-ன் நிறைவு  விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், உத்தரப் பிரதேச மாநிலத்தின் மாபெரும் விழாவையொட்டி இம்மாநிலத்திற்கு  தனது பயணம்  அமைந்திருப்பது  மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.மக்கள்தொகை அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக இருப்பதைத் தவிர, நாட்டின் பொருளாதாரத்திற்குப்  பங்களிப்பதில் உத்தரப் பிரதேசம் பல துறைகளிலும்  இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார்.

அரசியல் நிலைத்தன்மையும் நிர்வாகத்தின் தொடர்ச்சியும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய குடியரசுத்தலைவர், தற்போது உத்தரப் பிரதேசத்தில் நிலையான மற்றும் முடிவெடுக்கும் அரசாங்கம் உள்ளது என்றார். உத்தரப் பிரதேச அரசு தொலைநோக்கு கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துகிறது என்று அவர் கூறினார். இதன் விளைவாக, உத்தரப் பிரதேசம், புதிய இந்தியாவின் வளர்ச்சி இயந்திரத்தில்  பங்காற்றத் தயாராக உள்ளது. இந்த உச்சி மாநாட்டின் மூலம், உத்தரப் பிரதேசத்தில் சுமார் 35.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  இது லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைவதில், உத்தரப் பிரதேசத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற உத்தரப் பிரதேசம் தீர்மானித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கிற்கு உத்தரபிரதேசம் பங்களிக்கும். உத்தரப் பிரதேசத்தில் பொருளாதாரத்திற்கு அளிக்கப்படும் ஊக்கம் தற்சார்பு இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தை முதலீட்டுக்குரிய  இடமாக மாற்றுவதற்கான முயற்சிகளைக்  குடியரசுத் தலைவர் பாராட்டினார். 'சிறந்த முதலீட்டு மாநிலமாக' உத்தரப் பிரதேசம் உலகப் புகழ் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். உத்தரப் பிரதேசம் மேலும் வளம் பெற்றால், இந்தியாவும் வளம் பெறும் என்று கூறினார்.

***

AP / SMB / DL



(Release ID: 1898558) Visitor Counter : 246


Read this release in: English , Urdu , Marathi , Hindi