வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின்போது உத்தரப்பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கு பெரிய ஆர்வம் காணப்படுவதற்கு மாநிலத்தில் உள்ள நேர்மையான அரசு மற்றும் பாதுகாப்பான சூழலே காரணம்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல்

Posted On: 12 FEB 2023 3:13PM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை பல நிறுவனங்கள் காட்டி உள்ளன என்றும் மாநிலத்தில் நேர்மையான அரசும் பாதுகாப்பான சூழலும் இருப்பதே இதற்கு காரணமாக உள்ளது எனவும் மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று கூறினார்.

லக்னோவில் உத்தரப்பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்த உச்சி மாநாட்டில் உணரக்கூடிய வேகமான முன்னேற்றத்திற்கு முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத்தின் திறமையான தலைமையே காரணம் என்று தெரிவித்தார். உத்தரப்பிரதேசம் இப்போது முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

எளிதாக தொழில் புரியக்கூடிய தரவரிசை குறித்துப் பேசிய திரு பியூஷ் கோயல், கடந்த சில ஆண்டுகளில் இந்தியா உலகளாவிய தரவரிசையில் முன்னேறியுள்ளது என்று கூறினார். இந்தியாவில் மாநிலங்களின் தரவரிசையைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேசம் நாட்டிலேயே 2-வது இடத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். ஸ்டார்ட்அப் எனப்படும் புத்தொழில் சூழல் அமைப்பில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 8,277 புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன எனவும் இந்த மாநிலம் இதில் 4வது இடத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து மாநிலங்களும் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டதைக் குறிப்பிட்ட திரு. பியூஷ் கோயல் இதில் உத்தரப்பிரதேசம் முன்னிலை வகிப்பதாகத் தெரிவித்தார்.  ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டம் இந்த மாநிலத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதாகவும் கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் இருந்து ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.  உத்தரப்பிரதேசம் உண்மையிலேயே வாய்ப்புகளின் பூமி என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் பெரிய அளவில் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த உச்சிமாநாடு சரியான நேரத்தில் நடத்தப்பட்டிருப்பதாகவும் திரு. பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 

***

AP  / ES  / DL


(Release ID: 1898531) Visitor Counter : 190