சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுக் கூட்டம், அனைத்து ஜி 20 நாடுகளும் மூன்று முன்னுரிமைப் பகுதிகளின் குறிக்கோளை நோக்கி ஆக்கப்பூர்வமாக செயல்படும் அர்ப்பணிப்புடன் பெங்களூருவில் நிறைவடைந்தது

Posted On: 11 FEB 2023 3:51PM by PIB Chennai

நிலச் சீர்கேட்டைத் தடுத்தல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் செழுமைப்படுத்துதல் ஆகிய மூன்று முன்னுரிமைப் பகுதிகளை நோக்கி ஆக்கப்பூர்வமாகச் செயல்பட ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை அனைத்து ஜி20 நாடுகளும் வெளிப்படுத்திய ஆக்கப்பூர்வமான அணுகுமுறையுடன் முதலாவது ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுக் கூட்டம் இன்று பெங்களூரில் நிறைவடைந்தது. பல்லுயிர் பெருக்கம், நீலப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் போன்ற பல அம்சங்கள் இதில் விவாதிக்கப்பட்டன.

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மைப் பணிக்குழுவின் முதல் கூட்டம், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தில் 2023 பிப்ரவரி 9 முதல் 11 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

காட்டுத் தீ தடுப்பு மற்றும் சுரங்கப் பகுதிகளின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு நிகழ்வுடன் முதல் நாள் கூட்டம் தொடங்கியது.

மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி-யின் தொடக்க உரையுடன்  இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியது. அதன்பின், சுற்றுச் சூழல் அமைச்சகச் செயலாளர் திருமதி லீனா நந்தன் உரையாற்றினார். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கல்களை ஒருமித்த அணுகுமுறை மூலம் இந்தியா தீர்க்க விரும்புகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

மூன்றாவது மற்றும் நிறைவு நாள், கூட்டம் ‘நிலையான மற்றும் பருவநிலைக்கு ஏற்ற நீலப் பொருளாதாரம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட அமர்வுடன் தொடங்கியது. புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம் ரவிச்சந்திரன் தொடக்கவுரையாற்றினார். பெருங்கடல்கள், நீலப் பொருளாதாரம், கடல் குப்பைகள், கடலோர சூழல் அமைப்புகளைப் பாதுகாத்து மேம்படுத்துதல், கடல் சார்ந்த திட்டமிடல்கள் போன்றவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. கடலில் பிளாஸ்டிக் குப்பை தொடர்பான பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இந்த விவாதங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

கடல் வளங்களின் நிலையான பயன்பாடு, மாசுபாட்டைத் தவிர்த்தல், கடல் குப்பைகளைத் தடுப்பது, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர்.

நீலப் பொருளாதாரம் பற்றிய முக்கிய அம்சங்களில் விரிவான விவாதத்தை மேற்கொள்வதற்காக, ஓஷன் 20 என்ற பெருங்கடல் 20  கூட்டத்தை நடத்த இந்தியாவின் ஜி20 தலைமை திட்டமிட்டுள்ளது. கடல் குப்பைகளை அகற்றுவதில் சமூகப் பங்கேற்பு மீதான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மே 21, 2023 அன்று கடற்கரையை சுத்தம் செய்யும் ஒருங்கிணைந்த நிகழ்வை இந்தியா நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

சுற்றுச் சூழல் மற்றும் புவி அறிவியல் அமைச்சகங்களின் செயலாளர்கள் இந்த விவாதங்கள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கினர்.

இந்த முதலாவது பணிக்குழுக் கூட்டத்தின் முடிவுகளை செயல்படுத்துவது குறித்தும் மேலும் பல பணிகளுக்காகவும் இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைத்து செயல்பட பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.

இந்த முதலாவது பணிக்குழுக் கூட்டத்தின்போது நடந்த விவாதங்களை மேலும் முன்னெடுத்துச்  செல்வது குறித்து 2023 மார்ச் 27 முதல் 29 வரை காந்திநகரில் நடைபெறும் 2வது பணிக்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.

 

***

PKV / PLM / DL



(Release ID: 1898334) Visitor Counter : 185