பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினர் விவகார அமைச்சகம், அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்ட அலுவலர்களுக்கு நல்லாட்சி குறித்த பயிலரங்கை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து நடத்தியது

Posted On: 11 FEB 2023 9:30AM by PIB Chennai

பழங்குடியினர் விவகார அமைச்சகம், அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்ட (ITDA) அலுவலர்களுக்கு  இன்று புதுதில்லியில் உள்ள குடிமைப் பணி அதிகாரிகள் நிறுவனத்தில், நல்ல நிர்வாகத்திற்கான பயிற்சிப் பட்டறையை நடத்தியது. பத்து மாநிலங்களைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐடிடிஏ திட்ட அலுவலர்கள் இந்த பயிலரங்கில் பங்கேற்றனர். கொள்கை மற்றும் அதை அமலாக்குவதற்கு இடையே உள்ள இடைவெளிகள் குறித்து அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

 

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, பயிலரங்கில் பங்கேற்று தமது கருத்துகளை எடுத்துரைத்தார்.  அவர் பேசுகையில், பட்டியலிடப்பட்ட பகுதிகளில் பழங்குடியினரின் பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவற்றை நோக்கம் கொண்ட இலக்கை அடைவது குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறினார். பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் அறிவிக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட பகுதிகளின் தன்மைகளைப் புரிந்துகொள்வதும், முன்னுரிமை அளிப்பதும், கலாச்சார ரீதியாக அவற்றை அறிந்து கொள்வதும், பழங்குடியினருக்கு நீதியை உறுதிப்படுத்துவதும் முக்கியம் என்றார்.  பழங்குடியினர் நலனுக்கான நிதி ஒதுக்கீடு கீழ் மட்டத்தில் திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை' என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினரின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் வளர்ச்சியை உறுதி செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று திரு அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திருமதி ரேணுகா சிங் சாருதா, பழங்குடியினரின் பிரச்சனைகளை திறமையான அணுகுமுறைகள் மூலமாக தீர்ப்பதன் மூலம், அவர்களின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றார். பழங்குடியினரின் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் எட்டு அமைச்சர்கள் பழங்குடியினப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

கல்வித்துறை இணையமைச்சர் திரு சுபாஷ் சர்க்கார், பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு அனில் குமார் ஜா  உள்ளிட்டோரும் இந்த பயிலரங்கில் பங்கேற்றனர்.

பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் அதிகாரிகள், கூடுதல் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் குழு விவாதங்களை நெறிப்படுத்தினர். பழங்குடியினர் நலன் தொடர்பான நான்கு முக்கிய தலைப்புகளில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதற்கும், புதிய யோசனைகளை ஊக்குவிப்பதற்காகவும், பழங்குடியினரை வளர்ச்சியின் நீரோட்டத்தில் விரைந்து ஒருங்கிணைப்பதற்கும், கூட்டாக இலக்கை அடையவும் இதுபோன்ற பல பயிற்சிப் பட்டறைகளை பழங்குடியினர் விவகார அமைச்சகம் தொடர்ந்து நடத்தவுள்ளது.

***

PKV / PLM / DL


(Release ID: 1898315) Visitor Counter : 164


Read this release in: English , Urdu , Hindi , Punjabi