உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் கர்நாடக வளாகத்திற்கு தார்வாடில் இன்று அடிக்கல் நாட்டினார்

Posted On: 28 JAN 2023 6:43PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, தார்வாடில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் கர்நாடக வளாகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் திரு. பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

திரு. அமித் ஷா தமது உரையில், நமது நாட்டில் தடய அறிவியலுக்குத் தனித் துறையை தொடங்கிய பெருமை முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் திரு எல்.கே. அத்வானியைச் சேரும் என்று கூறினார்.  2002 ஆம் ஆண்டில், திரு அத்வானி தடயவியல் அறிவியல் சேவைகள் இயக்குநரகத்தை நிறுவி, இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியதாக திரு அமித்ஷா குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், திரு நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சரானதாகவும் உலகின் சிறந்த தடய அறிவியல் ஆய்வகத்தை நிறுவுவதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டார் என்றும் திரு அமித் ஷா கூறினார்.  12 ஆம் வகுப்புக்குப் பிறகு நேரடியாக தடய அறிவியல் துறையில் கல்வி வழங்குவதற்காக குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை குஜராத்தில் அமைக்க அவர் முடிவு செய்ததாகவும் திரு. அமித்ஷா குறிப்பிட்டார்.

 

திரு. நரேந்திர மோடி பிரதமரான பிறகு, தேசிய அளவில் தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக திரு அமித் ஷா தெரிவித்தார். தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஒன்பதாவது வளாகத்தின் பூமிபூஜை இன்று கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இணையதள பாதுகாப்பு, டிஜிட்டல் தடயவியல், செயற்கை நுண்ணறிவு, மரபணு (டிஎன்ஏ) தடயவியல் போன்ற தடய அறிவியல் தொடர்பான பல்வேறு பாடத் திட்டங்கள் இந்த வளாகத்தில் கற்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உலகில் அதிக தடய அறிவியல் நிபுணர்களைக் கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார். 

 

குற்றங்களின் தன்மை மிக  மிக வேகமாக மாறி வருகிறது என்று கூறிய அவர், கள்ளநோட்டு வர்த்தகம், ஹவாலா பரிவர்த்தனைகள், எல்லை தாண்டிய ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல், இணைய தள குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல வகைகளில் குற்றங்கள் பெருகி வருவதாக தெரிவித்தார். குற்றவாளிகளை விட திறன்களில் அதிக அளவில் இருந்தால் மட்டுமே குற்றங்களைத் தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். குற்றங்களுக்கான தண்டனை விகிதங்கள் அதிகரிக்க வேண்டும் என்று கூறிய அவர், அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் இதில் உதவ முடியும் என்று அவர் தெரிவித்தார். தடய அறிவியல் அடிப்படையில் அறிவியல் ரீதியாக விசாரணை நடத்தப்படாவிட்டால், குற்றவாளியை நீதிமன்றத்தில் தண்டிக்க முடியாது என்று திரு. அமித்ஷா கூறினார்.

 

இந்தியா ஒவ்வொரு துறையிலும் முன்னேறும் போது, நமது சவால்களும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த சவால்களுக்கு ஏற்ப, நமது நிபுணர்களைத் தயார் செய்ய வேண்டும் என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தார்வாடில் தொடங்கப்படும் இப்பல்கலைக்கழகம் தார்வாட் இளைஞர்களுக்கு மட்டுமின்றி வட கர்நாடகா முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் என்றும், அத்துடன் கர்நாடகத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் இது உதவும் என்றும் திரு. அமித்ஷா கூறினார்.

 

*****

 

PLM / DL


(Release ID: 1894366) Visitor Counter : 221