குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டங்களைப் பார்வையாளர்களுக்குத் திறந்து வைக்கும் உத்யன் உத்சவ்-2023 நிகழ்ச்சியில் ஜனவரி 29-ல் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்


தோட்டங்கள் ஜனவரி 31 முதல் பொதுமக்களுக்குத் திறக்கப்படும்

பார்வையாளர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்

Posted On: 28 JAN 2023 5:27PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டங்கள் பார்வையாளர்களுக்குத் திறக்கப்படும் உத்யன் உத்சவ் 2023 நிகழ்ச்சியில் நாளை (ஜனவரி 29, 2023) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றுத் தோட்டங்களைத் திறந்து வைக்கிறார்.

 

இம்முறை தோட்டங்கள் (மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம், நடுப்பகுதிப் புல்வெளி, நீண்ட தோட்டம் மற்றும் வட்டத் தோட்டம்) சுமார் இரண்டு மாதங்களுக்கு பொது மக்கள் பார்வைக்குத் திறந்திருக்கும். தோட்டங்கள் ஜனவரி 31, 2023 முதல் பொது மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும். இந்தத் தோட்டங்கள் மார்ச் 26, 2023 வரை திறந்திருக்கும். இதில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாட்களான திங்கள் கிழமைகள் மற்றும் ஹோலியை முன்னிட்டு மார்ச் 8 அன்று தோட்டங்கள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படமாட்டாது. மார்ச் 28 முதல் 31 வரை, பின்வரும் நாட்களில் சிறப்புப் பிரிவினருக்குத் தோட்டங்கள் திறந்திருக்கும்:

 

மார்ச் 28 - விவசாயிகளுக்கு

மார்ச் 29 - மாற்றுத் திறனாளிகளுக்கு

மார்ச் 30 - பாதுகாப்புப் படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறையினருக்கு,

மார்ச் 31 - பழங்குடியின பெண்கள் சுய உதவிக்குழுக்கள் உட்பட பெண்களுக்கு

 

ஆன்லைன் முன்பதிவு மூலம் மக்கள் தங்கள் நேரப் பகுதியை முன்கூட்டியே பதிவு செய்யலாம். https://rashtrapatisachivalaya.gov.in அல்லது https://rb.nic.in/rbvisit/visit_plan.aspx. என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். நேரடிப் பார்வையாளர்களும் தோட்டத்திற்குச் செல்லலாம். இருப்பினும், அவர்கள், குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவு வாயில் எண். 12க்கு அருகிலுள்ள சுய சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும். அவசரத்தைத் தவிர்க்கவும் நேரத்தை மிச்சப்படுத்தவும் முன்கூட்டியே இணையதளத்தில் பதிவு செய்வது நல்லது.

 

குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பல்வேறு தோட்டங்கள் உள்ளன. கிழக்குப் புல்வெளி, மத்திய புல்வெளி, நீண்ட தோட்டம் மற்றும் வட்ட தோட்டம் ஆகியவை ஏற்கெனவே இருந்தன. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் திரு ராம்நாத் கோவிந்த் பதவிக் காலங்களில், மூலிகை-I, மூலிகை-II, தொட்டுணரக்கூடிய தோட்டம், போன்சாய் தோட்டம் மற்றும் ஆரோக்கிய வனம் என பல தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை அமிர்தப் பெருவிழா என கொண்டாடும் போது, குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்களுக்கு ‘அம்ரித் உத்யன்’ என்று பொதுவான பெயர் சூட்டப்பட்டது.

 

குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டங்களைத் தவிர, மக்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் (புதன் முதல் ஞாயிறு வரை) குடியரசுத் தலைவர் மாளிகைக்கும், வாரத்தில் ஆறு நாட்கள் (செவ்வாய் முதல் ஞாயிறு வரை) குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகத்துக்கும் செல்லலாம். அரசு விடுமுறை நாட்களைத் தவிர ஒவ்வொரு சனிக்கிழமையும் படைமாற்ற நிகழ்ச்சியையும் காணலாம். மேலும் விவரங்கள் http://rashtrapatisachivalaya.gov.in/rbtour/ என்ற இணையதளத்தில் கிடைக்கும்.

*****

 

PLM / DL



(Release ID: 1894347) Visitor Counter : 168