தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழா மும்பையில் இன்று தொடங்கியது
உலக சினிமாவின் சிறந்த அனுபவங்களை பெறுவதற்கு திரைப்பட இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை திரைப்பட விழா வழங்குகிறது: தகவல் ஒலிபரப்பு அமைச்சர்
"எஸ்சிஓ பகுதியைச் சேர்ந்த திரைப்படங்களின் பன்முகத்தன்மை மற்றும் திரைப்படத் தயாரிப்பு பாணிகளை பறைசாற்றுவதே இந்தியா இந்த விழாவை ஏற்பாடு செய்வதன் இலக்காகும், திரைப்பட விழாவின் முக்கிய குறிக்கோளும் இதுவே”: தகவல் ஒலிபரப்பு அமைச்சர்
" எஸ்சிஓ நாடுகளில் இந்திய திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு காணப்படுகிறது, மக்களுடன் மக்கள் தொடர்புக்கு பெரும் பங்காற்றியுள்ளன": தகவல் ஒலிபரப்பு அமைச்சர்
Posted On:
27 JAN 2023 8:52PM by PIB Chennai
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்பட விழா, கோலாகல கொண்டாட்டம், இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைச்சாற்றும் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சிகளுடன் மும்பை தேசிய கலைத்திறன் மையத்தில் இன்று தொடங்கியது. இந்திய சினிமா மற்றும் என்சிஓ நாடுகளின் புகழ்பெற்ற திரைப்பட ஆளுமைகள் பங்கேற்ற இந்த விழாவை மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூர், மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி. மீனாட்சி லேகி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழாவில் வரவேற்புரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர், “எஸ்சிஓ திரைப்பட விழா, உலக சினிமாவின் சிறந்தவற்றின் அனுபவத்தை பெறுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும், கட்டமைப்பதற்குமான தனித்துவமான வாய்ப்புகளையும், வியத்தகு சந்தர்ப்பங்களையும் திரைப்பட இயக்குநர்களுக்கு வழங்குகிறது” என்றார்.
எஸ்சிஓ திரைப்பட விழா, எஸ்சிஓ அமைப்பின் இந்தியாவின் தலைமைத்துவத்தை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார். எஸ்சிஓ பகுதியைச் சேர்ந்த திரைப்படங்களின் பன்முகத்தன்மை மற்றும் திரைப்படத் தயாரிப்பு பாணிகளைக் பறைசாற்றுவதே இந்தியா இந்த விழாவை ஏற்பாடு செய்வதன் இலக்காகும், திரைப்பட விழாவின் முக்கிய குறிக்கோளும் இதுவே என்றார் அவர். “திரைப்பட கூட்டாண்மைகளை ஏற்படுத்தி நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொண்டு இளம் திரைப்பட இயக்குனர்களின் திறமையை வளர்த்து இந்த தனித்துவமான பிராந்தியத்தின் கலாச்சாரங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.
திரைப்படக் கலையை மேம்படுத்தி, ஒருமித்த உணர்வுகளை ஏற்படுத்தி திரைப்பட கூட்டாண்மைகளை கட்டமைப்பதுடன் எஸ்சிஓ திரைப்பட விழாவை இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட ஆளுமைகள், வளரும் திரைப்பட இயக்குநர்கள் சினிமா ரசிகர்களின் கலவையான அனுபவத்தை இந்த திரைப்பட விழாவின் மூலம் ஏற்படுத்துவதே எஸ்சிஓ மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூர் கூறினார். இந்திய சினிமாவுக்கான வாய்ப்புகளையும், கட்டமைப்பையும் மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த திரைப்பட விழா அமையும் என்று அவர் கூறினார். “எஸ்சிஓ அமைப்பின் இந்திய தலைமைப் பொறுப்பின் கீழ் இந்த திரைப்பட விழா எண்ணற்ற துடிப்பான கலாச்சாரங்கள், அழகியல் உணர்வுகள் மற்றும் திரைப்பட சிறப்பை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
“எஸ்சிஓ பிராந்தியம், வேறுபட்ட நாகரீகங்களின் கலவையாகும். கலை மற்றும் கலாச்சாரத்தின் செழுமையான பாரம்பரிய தொட்டில் ஆகும். இவை, உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு விருதுகளைப் பெற்ற எஸ்சிஓ நாடுகளின் திரைப்படங்களில் பிரதிபலிக்கின்றன என்று அமைச்சர் கூறினார்.
2019 ஆம் ஆண்டு மும்பையில் தேசிய இந்திய திரைப்பட அருங்காட்சியகத்தை தொடங்கி வைத்தபோது பிரதமர் திரு.நரேந்திர மோடி, திரைப்படங்களும், சமுதாயமும் ஒன்றையொன்று பிரதிபலிப்பவை என்று குறிப்பிட்டதை அமைச்சர் நினைவுகூர்ந்தார். திரைப்படங்களில் காணும் காட்சிகள் சமுதாயத்தில் நடக்கின்றன. சமுதாயத்தில் நடப்பவைதான் திரைப்படங்களில் காட்டப்படுகின்றன.
திரைப்படம் குறித்து உரையாற்றிய அமைச்சர், நாட்டின் செழுமையான கலாச்சாரம். பாரம்பரியம், மரபு, நம்பிக்கைகள், கனவுகள், அபிலாசைகள், லட்சியங்கள் ஆகியவற்றுடன், மாறி வரும் சூழலில் நாட்டின் காலத்தால் முற்பட்ட கதைகளின் சங்கமத்தை திரைப்படம் படம் பிடித்துக் காட்டுகிறது என்று கூறினார். “சமுதாயங்கள், கலாச்சாரங்கள், முரண்பாடுகளின் சாராத்தை திரைப்படம் உண்மையில் படம் பிடிப்பதுடன் நமது கூட்டு மனசாட்சியை பல்வேறு திரைப்பட வழிகளில் பிரதிபலிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய திரைப்படம்:
இந்திய இளைஞர்களின் தனித்திறமை மற்றும் அசாத்திய புத்தி கூர்மையைக் கொண்டு உலகின் திரைப்பட உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றி வருகிறோம் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார். இதனை வெறும் கலையாக மட்டும் பார்க்காமல், உலகம் முழுவதும் உள்ள மக்களையும், அவர்களின் கலாச்சாரத்தையும் இணைக்கும் ஊடகமாக கருதுவதால், கடந்த நூற்றாண்டில் இந்திய சினிமா எல்லைகளைக் கடந்து சாதனைப் படைத்திருக்கிறது என்று கூறினார். இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய திரைப்பட உற்பத்தியாளராக இருப்பதுடன், திரைப்படம் சார்ந்த புத்தாக்க முயற்சிகளை அவ்வப்போது மேம்படுத்துவதுடன், உலக மக்களால் பெரிதும் கவரப்படும் சில திரைப்படங்களின் அனிமேஷன் உத்தியை வடிவமைத்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். படைப்பாற்றல், தொழில்நுட்ப திறமை, திறன்வாய்ந்த பணியாளர்கள், ஆகியவற்றை கொண்ட மாபெரும் சமூகமாக இந்தியா திகழ்வதால், உலகளவிலான திரைத்துறையினருக்கு உலகத்தரம் வாய்ந்த படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ளும் வசதியை கொண்டிருப்பதாகவும் கூறினார். நம்முடைய படைப்பாற்றல் பொருளாதாரம் நம்மை ஓடிடி-ல் பீடுநடைப்போட உதவுவதாகவும், இந்த துறையின் தேவைக்கு ஏற்ப புதிய வேகத்துடன் செயல்பட மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகள் பெரிதும் உதவுவதாகவும் குறிப்பிட்டார்.
உலகின் முக்கிய 12 சேவைத்துறைகளில் ஒன்றான ஆடியோ, வீடியோ சேவையை இந்தியா அதிகாரப்பூர்வமாக மேற்கொண்டு வருவதாகவும், ஏவிஜிசி பணிக்குழு இந்த துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், திரைப்பட தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க 2 திட்டங்களை இந்தியா அறிவித்ததுடன் படைப்பாளிகள் இந்தியாவிற்கு வரவேண்டும் என அறிவித்ததையும் நினைவுகூர்ந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்இஓ) இடம் பெற்றுள்ள உறுப்பு நாடுகள், இந்தியாவின் ஆடியோ- விஷவல் உபத் தயாரிப்பு ஊக்கத் தொகை திட்டம், இந்தியாவில் வெளிநாட்டு திரைப்படப் படப்பிடிப்புக்கான ஊக்கத் தொகை திட்டம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், இவை எஸ்இஓ-வின் திறன்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார்.
இந்திய திரைப்படங்கள் எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் அதிகளவில் திரையிடப்படுவதாகவும், அந்த நாட்டு மக்களுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக இந்த நாடுகளில் இந்தியத் திரைப்படங்களை அதிகளவில் வெளியிடும் எஸ்சிஓ பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்ட அமைச்சர், மத்திய ஆசிய பிராந்திய மக்களின் உள்ளம் கவர்ந்த திரைப்படங்களாக இந்தியத் திரைப்படங்கள் புகழ் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
1957-ம் ஆண்டு இந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான ராஜ்கபூரின் மதர் இன்டியா திரைப்படத்தைக் காண ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியதை நினைவுகூர்ந்தார். அதே போல் ராஜ்கபூரின் அவாரா திரைப்படம் சோவியத் யூனியனில் முதல் முதலாக திரையிடப்பட்ட பாலிவுட் திரைப்படம் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தி கதாநாயகர்களான திலீப்குமார், தேவ் ஆனந்த், கதாநாயகி நர்கீஸ் ஆகியோருக்கு எஸ்இஓ உறுப்பு நாடுகளில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதையும், 1970-கள் மற்றும் 80-களில் பாலிவுட் ஜாம்பவான் எல்லைகளை கடந்து அதிரடி ஹிட்களை கொடுத்ததுடன், நினைவில் நின்ற வசனங்களையும், ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்தியதையும் குறிப்பிட்டார். அதே போல் மிதுன் சக்ரவர்த்தியின் நடன அசைவுகள் எஸ்சிஓ நாடுகளின் ரசிகர்கள் மத்தியில் என்றும் நினைவுகூரப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பாகுபலி திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் இந்த நாடுகளில் மாபெரும் ரசிகர்களை தன்வசம் ஈர்த்திருப்பதுடன், அஜய் தேவ்கனின் த்ரிஷ்யம் திரைப்படம் அதன் திரைக்கதை மற்றும் வசனத்திற்காக எஸ்இஓ நாடுகளின் ரசிகர்களை மகிழ்வித்ததையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற எஸ்சிஓ இளைஞர் பிரதிநிதிகள் கூட்டத்தில், அவர்கள் இந்திய பாடல்களை பாடியதுடன், புகழ் பெற்ற திரைப்பட நடனங்களை அரங்கேற்றியதையும் கூறினார்.
மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி வாழ்த்துரை வழங்கினார்.
நடிகை ஹேமாமாலினி,
இயக்குனர்கள் ப்ரிதுல் குமார், ராகுல் ரவேல், சீனத் திரைப்பட இயக்குனர் நிங் இங், கஜகஸ்தான் இசையமைப்பாளர் திமேஷ்குடேபர்கன், இயக்குனர் குல்பராடோலோ முசோவா, ரஷ்ய திரைப்படத் தயாரிப்பாளர் இவான் குட்ரிஅவுட்சேவ், தஜிகிஸ்தான் திரைப்படத் தயாரிப்பாளர் மெஹ்செட்ஷோஹியான், உஸ்பெகிஸ்தான் நடிகர் மட்யகுப்சதுல்லாயவிச் மச்சனோவேர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னணி திரைப்படக் கலைஞர்களான ப்ரியதர்ஷன், ஊர்வசி, அக்ஷய்குமார், டைகர் ஷ்ரோஃப், , சஜித்நடியட்வாலா. ஈஷாகுப்தா, பூணம் திலியன், எலி ஆவ்ரம், ஹிரிஷிதா பட், ஜாக்கி பக்னானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பாரத் ஹை ஹூம் என்ற அனிமேஷன் சீரியலின் டிரைலரை அமைச்சர் வெளியிட்டார்.
இந்தியாவில் நடைபெறும் முதல் எஸ்சிஓ திரைப்பட விழாவில் போட்டி மற்றும் போட்டி அல்லாத பிரிவுகளில் மொத்தம் 57 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்த திருவிழாவின் துவக்கமாக, இயக்குனர் பிரியதர்ஷனின் ஊர்வசி நடித்த ஹிட் திரைப்படமான அப்பத்தாவின் பிரிமியர் காட்சிகள் வெளியிடப்பட்டன.
******
AP/DL
(Release ID: 1894226)
Visitor Counter : 220