கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

கிரேட் நிகோபார் தீவில் சர்வதேச துறைமுகத்திற்கு ஆர்வமுள்ள நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Posted On: 27 JAN 2023 10:17AM by PIB Chennai

மத்திய அரசு அறிவித்துள்ள தீவு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கிரேட் நிகோபார் தீவை முழுமையாக மேம்படுத்தும் வகையில், கிரேட் நிகோபாரின் கலாத்தியா விரிகுடாவில் மிகப் பெரிய சர்வதேச பெட்டகம் ஏற்றி இறக்கும் துறைமுகத்தை உருவாக்க மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், விமான நிலையம். நகரியம் மற்றும் மின்சார உற்பத்தி நிலையம் ஆகிய திட்டங்களும் அடங்கும்.

இந்த துறைமுகத்தை முன்னணி பெட்டக துறைமுகமாக மாற்றும் வகையில் 3 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும். இந்திய துறைமுகங்கள் உட்பட அனைத்து துறைமுகங்களும் அணுகக் கூடிய வகையில், சர்வதேச கப்பல்கள் வந்து செல்லும் வகையில் எளிதான அணுகல், இயற்கையில் 20 மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதி, வர்த்தக கப்பல் பயணப்பாதை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

இந்திய மற்றும் பிராந்திய கப்பல் போக்குவரத்தை ஈர்ப்பதுடன் போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில் இந்த துறைமுகம் உருவாக்கப்படும். ஆசியா-ஆப்பிரிக்கா, ஆசியா-அமெரிக்கா/ஐரோப்பா கண்டெய்னர் வர்த்தக முனையமாக இதனை மாற்ற வகை செய்யப்படும்.

தற்போது இந்தியாவின் சரக்குகளில் சுமார் 75 சதவீதம் வெளிநாட்டு துறைமுகங்களின் மூலமே கையாளப்படுகின்றன. கொழும்பு, சிங்கப்பூர், கிளாங் துறைமுகங்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட சரக்குகள் கையாளப்படுகின்றன. இதில் 45 சதவீதம் கொழும்பு துறைமுகத்தில் கையாளப்படுகிறது. இந்தத் துறைமுகம் உருவானால் ஒவ்வொரு ஆண்டும் 200 முதல் 220 மில்லியன் டாலரை இந்திய துறைமுகங்கள் மிச்சப்படுத்தலாம். மேலும் இந்த துறைமுகத்தின் மூலம் அன்னிய செலாவணி சேமிப்பு, அன்னிய நேரடி முதலீடு பெருகி இந்தியாவின் இதர துறைமுகங்களில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.41,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த துறைமுகம் 4 கட்டங்களாக உருவாக்கப்படும். திட்டத்தின் முதல் கட்டம் 2028 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழித்துறை அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால், இத்திட்டம் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்க பெரிதும் உதவுவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக அமையும் என்றும் குறிப்பிட்டார். பிரதமர் திரு.நரேந்திர மோடியின் புதிய இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து பாடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

***

PKV/RR/KRS



(Release ID: 1894081) Visitor Counter : 142