விவசாயத்துறை அமைச்சகம்
போபாலில் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் நிறைவு விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் உரை
Posted On:
24 JAN 2023 6:43PM by PIB Chennai
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் இந்திய –சர்வதேச அறிவியல் திருவிழாவின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ், அறிவியல் தொழில்நுட்பத்தில் நாடு துரிதவளர்ச்சி அடைந்து வருவதாகத் தெரிவித்தார். மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும் துறைகளில் ஒன்றாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மாறியிருப்பதாகவும் கூறினார்.
மாணவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மத்திய-மாநில அரசுகள் இணைந்து பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இளைஞர் சக்தியே பலமாக இருப்பதால், நாடு ஒவ்வொரு ஆண்டும் தன் இலக்கை எட்டி, வளர்ச்சி கண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். நரேந்திர மோடி அரசு, ஆட்சிக்கு வந்தபோது, அறிவியல் தொழில்நுட்பத்திற்கு பட்ஜெட்டில் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த நிதி ஒதுக்கீடு தற்போது 6 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்தார்.
அறிவியல் தொழில்நுட்பம் இல்லாத துறையே இல்லை என்ற அவர், குறிப்பாக, வேளாண் துறையில் தொழில்நுட்பங்களின் வருகையால், விவசாயப் பணிகள் எளிதாக மாறியிருப்பதுடன், இழப்புகளும் குறைந்து விவசாயிகளின் நேரமும் சேமிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். டிஜிட்டல் வேளாண் இயக்கம் வாயிலாக விவசாயிகள் பெரும்பலன் அடைந்து இருப்பதாகவும், குறிப்பாக வேளாண் துறையில் தொழில்நுட்பங்களின் உதவியுடன் விளைபொருள் உற்பத்தி அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், நாட்டு மக்கள் தேவையையும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
***
AP/ES/RS/KRS
(Release ID: 1893375)
Visitor Counter : 172