தேர்தல் ஆணையம்

'தேர்தல் ஒருமைப்பாடு' குறித்த கூட்டு செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாக, 'தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் ஒருமைப்பாடு' என்ற தலைப்பில் இரண்டாவது சர்வதேச மாநாட்டை தேர்தல் ஆணையம் நடத்துகிறது

Posted On: 22 JAN 2023 5:31PM by PIB Chennai

இந்திய தேர்தல் ஆணையம், 2023 ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் புதுதில்லியில் ‘தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் இரண்டாவது சர்வதேச மாநாட்டை நடத்துகிறது.

2021 டிசம்பரில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டின் தொடர்ச்சியாக, தேர்தல் ஒருமைப்பாடு குறித்த சர்வதேசக் கூட்டமைப்பை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வழிநடத்துகிறது. இந்தக் கூட்டமைப்பின் முதல் சர்வதேச மாநாடு 2022-ஆம் ஆண்டு 31 அக்டோபர் மற்றும் 01 நவம்பர் ஆகிய நாட்களில் புதுதில்லியில் நடைபெற்றது. 'தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பங்கு, கட்டமைப்பு மற்றும் திறன்' என்ற தலைப்பில் 11 நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளைச் சேர்ந்த 50 பிரதிநிதிகள் முதல் மாநாட்டில் பங்கேற்றனர்.

நாளை (ஜனவரி 23) தொடங்கும் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் தொடங்கி வைக்கிறார். நிறைவு அமர்வுக்கு இந்திய தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே தலைமை தாங்குகிறார். முதல் தொழில்நுட்ப அமர்வுக்கு இந்திய தேர்தல் ஆணையர் திரு அருண் கோயல் தலைமை வகிக்கிறார்.

அங்கோலா, அர்ஜென்டினா, ஆர்மேனியா, ஆஸ்திரேலியா, சிலி, குரோஷியா, டொமினிகா, பிஜி, ஜார்ஜியா, இந்தோனேஷியா, கிரிபாட்டி, மொரீஷியஸ், நேபாளம், பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், சுரினாம் ஆகிய 17 நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளில் இருந்து  43 பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். சர்வதேச தேர்தல் நடைமுறை அமைப்பு (IFES), சர்வதேச ஜனநாயக மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் (International IDEA) ஆகியவற்றில் இருந்து 6 சர்வதேச பிரதிநிதிகளும் இந்த இரண்டாவது மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுதில்லியில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*****

 

PKV / PLM / DL



(Release ID: 1892850) Visitor Counter : 149