உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காவல்துறை தலைமை இயக்குனர்கள் /காவல்துறை கண்காணிப்பாளர்களின் 57வது மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா புதுதில்லியில் இன்று தொடங்கிவைத்தார்

Posted On: 20 JAN 2023 8:39PM by PIB Chennai

காவல்துறை தலைமை இயக்குனர்கள் /காவல்துறை கண்காணிப்பாளர்களின் 57வது மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறை தலைமை இயக்குனர்கள்/ காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆயுதப்படை பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நாடு முழுவதிலும் இருந்து 600க்கும் அதிகமான பல்வேறு நிலையிலான அதிகாரிகள் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டனர்.

 

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசாகவும், 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியப்  பொருளாதாரத்தை ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலராகவும் மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் ஜம்மு & காஷ்மீர், வடகிழக்கு, இடதுசாரி அதிதீவிரவாதம் ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்வதில் பாதுகாப்புப் படைகளின் சாதனைகளை பட்டியலிட்ட உள்துறை அமைச்சர், இவற்றை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய ஆலோசனையையும் தெரிவித்தார். டிஜிட்டல் பொதுச்சொத்துக்களைப்  பாதுகாப்பதற்கான சிறப்பு அணுகுமுறையை தவிர, காவல் படைகளுக்குத் திறன் வளர்ப்பு, கடினமான உள் கட்டமைப்பை கொண்ட துறைகளை பாதுகாத்தல் ஆகியவை குறித்து அமைச்சர் விளக்கினார்.

 

மேலும் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பின் மூலம் போதைப் பொருள் கடத்தல், ஹவாலா மற்றும் குறிப்பிட்ட பகுதியில் அதிக குற்ற செயல் ஆகியவற்றை சிறப்பாக கையாள முடியும் என்று தெரிவித்தார்.

 

முதல் நாளில், நேபாளம் மற்றும் மியான்மர் உடனான நில எல்லையில் உள்ள பாதுகாப்பு சவால்கள், விசா காலம் முடிந்தும், இந்தியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர்களை கண்டறிதல், மாவோயிஸ்டுகள் செயல்பாடு கண்காணிப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த இரண்டு நாள் மாநாட்டில், சமீபகாலமாக அதிகரித்து வரும் காவல்துறை சவால்கள், வாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் களப்பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து ஆலோசிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கம் மற்றும் தேசிய அளவில் சிறப்பாக பணிபுரிந்த 3 காவல் நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் பரிசு வழங்கினார்.

 

*****

 

SMB / TV / DL




(Release ID: 1892653) Visitor Counter : 216


Read this release in: English , Urdu , Marathi , Manipuri