வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்தியப் பிரதேசம் சிறந்த முதலீட்டிற்கான இடமாக உருவெடுத்துள்ளது: திரு கோயல்
Posted On:
11 JAN 2023 4:11PM by PIB Chennai
முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக மத்தியப்பிரதேசம் உருவெடுத்திருப்பதாக மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் நலன், உணவு, பொதுவிநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தின் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ல் காணொலிக்காட்சி மூலம் பங்கேற்று பேசிய அவர், மத்தியப்பிரதேசத்தில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் பங்குதாரர்களாக மாறுவதற்கு உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த உச்சிமாநாடு, இந்தியாவின் எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் பங்கெடுக்கும் வாய்ப்பை அளித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், மத்தியப்பிரதேசத்தின் எண்ணற்ற முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். உள்கட்டமைப்பு, வேளாண்மை, உணவுப்பதப்படுத்துதல், மோட்டார் வாகனம், சுற்றுலா, ஜவுளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் அபரிதமான வாய்ப்புகள் திறன் படைத்தோருக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தேசத்தின் இதயமாகத் திகழும் மத்தியப்பிரதேசம், புதிய இந்தியாவின் துடிப்பான வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாகக் கூறினார். புவி அமைப்புகள்படி நாட்டின் மையத்தில் உள்ள 2-வது மிகப் பெரிய மாநிலமான மத்தியப்பிரதேசத்தின் குறுக்கே, வட-தெற்கு மற்றும் கிழக்கு - மேற்கு போக்குவரத்து முனையங்கள் செல்வதையும் சுட்டிக்காட்டினார். சர்வதேச சந்தையில் இயற்கை பருத்தி உற்பத்தியில் மத்தியப்பிரதேசம் 24 சதவீதத்தை பூர்த்தி செய்வதாக கூறிய அவர், மத்தியிலும், மத்தியப்பிரதேசத்திலும் ஒரே கட்சி ஆட்சி வகிப்பது இந்த அதிவேக வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் வித்திடுவதாக திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமை ஹைட்ரஜன் இயக்கம், மத்தியப்பிரதேச அரசு அறிவித்து வரும் ஆதரவு காரணமாக, குறிப்பாக பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடுகள் கவரப்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
------
TV/ES/KPG/RJ
(Release ID: 1890519)
Visitor Counter : 166