பாதுகாப்பு அமைச்சகம்

ஏரோ இந்தியா 2023-க்கான தூதர்களின் வட்டமேசை மாநாட்டிற்கு பாதுகாப்பு அமைச்சர் தலைமை தாங்கினார்; புதுதில்லியில் நடைப்பெற்ற இந்த மாநாட்டில் 80-க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

Posted On: 09 JAN 2023 3:08PM by PIB Chennai

வரவிருக்கும் ஏரோ இந்தியா 2023-க்காக புதுதில்லியில் 2023 ஜனவரி 9 அன்று நடைபெற்ற தூதர்களின் வட்டமேசை மாநாட்டிற்கு  பாதுகாப்பு அமைச்சர்  திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தித்துறை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் 80-க்கும் அதிகமான நாடுகளின் தூதர்கள், துணைத் தூதர்கள்,  பொறுப்பு தூதர்கள், தூதரகங்களில் உள்ள பாதுகாப்புத்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 2023 பிப்ரவரி 13-17-க்கு இடையே கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறவுள்ள 14-வது ஏரோ இந்தியா 2023 எனும் ஆசியாவின் மிகப்பெரிய போர்விமானக் காட்சியில்  பங்கேற்குமாறு உலகம் முழுவதும் உள்ள பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.  உலகளாவிய இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் விமான தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பை ஊக்கப்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

 ஏரோ இந்தியா என்பது உலகளாவிய விமான வர்த்தக சந்தையின் முன்னோடி நிகழ்வு என்று தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர், இது வானூர்தி தொழில்துறை உள்ளிட்ட இந்தியாவின் பாதுகாப்பு விமான தொழில்துறைக்கான வாய்ப்பை வழங்குவதோடு அதன் தயாரிப்புகளையும், தொழில்நுட்பங்களையும் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது என்றார்.  இந்த 5 நாள் கண்காட்சி, வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை வர்த்தக ஒருங்கிணைப்புக்கு  சான்றாக திகழும் என்றும் இந்திய விமானப்படையின் விண்வெளி சாகச காட்சிகள் இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பாதுகாப்பு தொழில்துறையின் முக்கியமான தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் தவிர, உலகம் முழுவதிலுமிருந்து முக்கியமான பாதுகாப்பு தொழில்துறை சிந்தனையாளர்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார். விமானப் போக்குவரத்து தொழில்துறையில் தகவல், ஆலோசனைகள், புதிய தொழில்நுட்ப மேம்பாடுகள் பற்றிய பரிமாற்றத்திற்கு தனித்துவ வாய்ப்பையும், ஏரோ இந்தியா நிகழ்வு வழங்கும் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

 உங்களோடு இணைந்து நாங்கள் கட்டமைக்க விரும்புகிறோம். செயல்படுத்த விரும்புகிறோம். உருவாக்க விரும்புகிறோம். ‘நீங்கள் வேகமாக செல்லவிரும்பினால் தனியாக செல்லுங்கள், நீங்கள் வெகுதூரம் செல்லவிரும்பினால் துணையோடு செல்லுங்கள்’ என்பது ஆப்பிரிக்க நாட்டின் பழமொழி. எனவே நாங்கள் வெகுதூரம் செல்லவும், துணையோடு செல்லவும் விரும்புகிறோம். ஒத்துழைப்பு என்பது பொதுவான மனிதகுல பாரம்பரியத்தின் பண்பாகும். இதைத்தான் மகா உபநிஷத், வசுதைவ குடும்பகம் என குறிப்பிடுகிறது. உலகமே ஒரு குடும்பம் என்ற சிந்தனையை இதர உபநிஷதங்களும், மற்ற இலக்கியங்களும் வெளிப்படுத்துவதாக திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

ஏரோ ஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியின் குவிமையமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே குறிப்பிட்டார்.

‘லட்சக்கணக்கான வாய்ப்புகளின் ஓடுபாதை’ என்ற மையப்பொருளுடன்  யெலகங்கா விமானப்படை தளத்தில் 1.08 லட்சம் சதுர கி.மீ. பரப்பில் இந்த 5 நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 80 நாடுகளைச் சேர்ந்த 645 தொழில் நிறுவனத்தினர் இதுவரை பதிவு செய்துள்ளனர்.

                                                                                                                                  ***

SG/SMB/AG/RJ(Release ID: 1889852) Visitor Counter : 164