பாதுகாப்பு அமைச்சகம்

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாக்களுக்கான நுழைவுச்சீட்டு விநியோகம் டிஜிட்டல் முறைக்கு மாறுகிறது

Posted On: 06 JAN 2023 1:23PM by PIB Chennai

மத்திய அரசின் அரசு சேவைகளை இணையமயமாக்கும் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, குடியரசு தின மற்றும் சுதந்திர தின நிகழ்வுகளில், முக்கிய பிரமுகர்கள்/விருந்தினர்கள் பங்கேற்பதற்கான மின் அழைப்பிதழ்களை அனுப்பவும், அந்நிகழ்வுகளைக் காண பொதுமக்களுக்கு இணைய வழியே நுழைவுச்சீட்டு வழங்குவதற்கும், இணைய வழி மேலாண்மைத் தளம்  (www.aamantran.mod.gov.in) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.அஜய் பட் அவர்களால் ஜனவரி 06, 2023-ம் தேதியன்று டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தத் தளம், பொதுமக்களுக்கு அவர்கள் உள்ள இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், எங்கிருந்தாலும் குடியரசு/சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான நுழைவுச்சீட்டைப் பெறுவதற்கான வசதியுடன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களது விருந்தினர்கள் இணைய வழியாகவே அனுமதிச்சீட்டுகளைப் பெறுவதற்கும் வழிவகை செய்கிறது. இந்தத் தளம், பயனாளர்களுக்கு எளிய செயல்முறையைக் கொண்டுள்ளதோடு, அரசுக்கும், பொது மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும். இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதற்கான விரிவான செயல்முறையை பின்வரும் இணைப்பு மூலம் பார்க்கலாம்:

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அஜய் பட், இத்தளம் ‘டிஜிட்டல் இந்தியா’ முயற்சியின் மற்றொரு மைல்கல் என்றும், எளிதான, பயனுள்ள, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 'அரசு சேவைகளை இணையமயமாக்கும்’ கருத்தை நோக்கிய ஒரு படி என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு குடிமகனும் சிரமமின்றி வாழ்வதை உறுதி செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறிய அவர், 'டிஜிட்டல் இந்தியா' மற்றும் 'குறைந்த நிர்வாகம், நிறைவான ஆட்சி' ஆகியவை அரசையும், மக்களையும் ஒன்றாகக் கொண்டு வருவதாகக் கூறினார். இந்தத் தளம், குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு (RDC) நுழைவுச்சீட்டு வாங்குவதை எளிதாக்குவதோடு, அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் அதிக அளவு காகிதத்தை சேமிக்கும் என்றும் அமைச்சர் அஜய் பட்  பாராட்டினார். இந்தத்தளம்,  குடியரசு தின கொண்டாட்டத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் என்றும் அவர் கூறினார்.

அமந்த்ரான் போர்டல் பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது:

மேம்பட்ட பாதுகாப்பிற்கான QR குறியீடு அடிப்படையிலான அங்கீகாரம்.

மின்னஞ்சல்கள்/எஸ்எம்எஸ் மூலம் பாஸ்கள்/டிக்கெட்டுகள் டிஜிட்டல் டெலிவரி.

ரத்து செய்ய முடியாத மற்றும் மாற்ற முடியாத டிக்கெட்டுகள்.

அழைப்பாளர்களிடமிருந்து அவர்களது சம்மதத்தைப் பெறும்  RSVP வசதி

எதிர்கால நிகழ்வுகளைச் சிறப்பாகத் திட்டமிடுவதற்காக நிகழ்வுக்குப் பின்னான தரவு பகுப்பாய்வு

ஆன்லைன் தளம் மூலம் மின் அழைப்பிதழ்களை வழங்குவதுடன், நுழைவுச்சீட்டு வாங்குவதற்கான சாவடிகள்/கவுண்டர்கள் பின்வரும் இடங்களில் அமைக்கப்படும். அங்கு பாதுகாப்பு அமைச்சகத்தால் இணைய வழியில் நுழைவுச்சீட்டுகள் வழங்குவது எளிதாக்கப்படும்:

சேனா பவன் (நுழைவாயில் எண் 2)

சாஸ்திரி பவன் (நுழைவாயில் எண் 3)

ஜந்தர் மந்தர் (பிரதான நுழைவாயில்அருகில்)

பிரகதி மைதானம் (நுழைவாயில் எண் 1)

நாடாளுமன்ற இல்லம் (வரவேற்பு அலுவலகம்) - எம்.பி.க்களுக்கான சிறப்பு கவுண்டர் (18.01.2023 அன்று திறக்கப்படும்)

நேரம் முற்பகல் (10.00 மணி முதல் 12.30 மணி வரை) மற்றும் பிற்பகல் (14.00 மணி முதல் 16.30 மணி வரை) இருக்கும். விரிவான வழிமுறைகளுக்கு, www.mod.gov.in, www.indianrdc.mod.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

(Release ID: 1889122)       

***

CR/RJ



(Release ID: 1889149) Visitor Counter : 146