சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், 2022-ஆம் ஆண்டில் மேற்கொண்ட முக்கிய முன்முயற்சிகளின் கண்ணோட்டம்
Posted On:
04 JAN 2023 12:09PM by PIB Chennai
2022-ஆம் ஆண்டில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள்:
• தேசிய நெடுஞ்சாலைகள்- கட்டமைப்பு மற்றும் சாதனைகள்:
உலகிலேயே இரண்டாவது மிக நீளமாக, 63.73 லட்சம் கிலோமீட்டர் சாலைகளை இந்தியா கொண்டுள்ளது. நவம்பர் 30, 2022 வரை நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த தூரம் 1,44,634 கிலோமீட்டர். நாடு முழுவதும் சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட முதல் கட்ட பாரத்மாலா திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட 24,800 கிலோமீட்டரில் 1755 கிலோமீட்டர் சாலைகள் கட்டமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. விடுதலையின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களிடையே, குளங்களை புதுப்பிக்கும் அமிர்த நீர்நிலைகள் என்ற முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளின் போது தூர்வாரப்படும் மண், களிமண் முதலியவை தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
• 2022-இன் முக்கிய நிகழ்வுகள்:
ரூ. 14,870 கோடி மதிப்பில் 262 கிலோமீட்டர் நீளம் கொண்ட பெங்களூரு-சென்னை விரைவு சாலை திட்டம், ரூ. 5850 கோடி செலவில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரட்டை அடுக்கு மேம்பால திட்டம், சென்னையில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா உள்ளிட்ட ஏராளமான திட்டங்களுக்கு கடந்த ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் தென் மண்டல மாநாட்டை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மண்டல மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
• பர்வத்மாலா:
வசதியான, பாதுகாப்பான மற்றும் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் போக்குவரத்தாக கயிற்றுப் பாதை என்ற ரோப்வே வளர்ந்து வருவதால், இதனை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. உத்தராகண்டில் இரண்டு புதிய கயிற்றுப் பாதை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பர்வத்மாலா திட்டத்தின் கீழ் இமாச்சலப் பிரதேசத்தில் ஏழு கயிற்றுப் பாதை திட்டங்களுக்கு நேஷனல் ஹைவேஸ் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனமும் அம்மாநில அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதேபோல மத்திய பிரதேசத்தில் 14 இடங்களில் கயிற்றுப் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் மாநில அரசும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் கையெழுத்திட்டன.
• சாலைப்போக்குவரத்து:
ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகன பதிவு, உரிமம் மாற்றுதல் உட்பட முற்றிலும் இணையதளம் வாயிலாகவே மேற்கொள்ளப்படும் குடிமக்கள் சார்ந்த 18 சேவைகளின் எண்ணிக்கையை 58 சேவைகளாக அமைச்சகம் அதிகரித்துள்ளது. இவை அனைத்தையும் சாலைப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமலேயே ஆதார் எண்ணின் உதவியோடு, எளிதில் பெற முடியும். வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட தனிநபர் வாகனங்களை இந்திய எல்லைக்குள் கொண்டு வருவதை முறைப்படுத்துவதற்கான விதிகளை அமைச்சகம் வெளியிட்டது.
இவை தவிர்த்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான வசதிகள், சாலை பாதுகாப்பை முன்வைக்கும் அறிவிப்புகள் மற்றும் முன்முயற்சிகள், சரக்குப் போக்குவரத்து மற்றும் அது சம்பந்தமான நெடுஞ்சாலை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள், துறைமுக இணைப்புத் திட்டங்கள், தொழில்நுட்பங்களின் பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தியின் பயன்பாட்டை ஊக்குவித்தல் உட்பட ஏராளமான முயற்சிகளை கடந்த ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மேற்கொண்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.
**************
(Release ID: 1888861)
Visitor Counter : 522