மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

"மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புக்கான இன்சூரன்ஸ் திட்டம்" என்ற தலைப்பில் மீன்வளத்துறையின் வலைத்தள கலந்துரையாடல் நிகழ்வு

Posted On: 31 DEC 2022 4:25PM by PIB Chennai

சுதந்திர இந்தியாவின் அமிர்தகால பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 29 டிசம்பர் 2022 அன்று "மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புக்கான இன்சூரன்ஸ் திட்டம்" என்ற தலைப்பில் மீன்வளத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் இணைந்து வலைத்தள கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்ச்சிக்கு, மத்திய அரசின்  மீன்வளத் துறையின்  செயலாளர் திரு ஜதீந்திர நாத் ஸ்வைன் தலைமை வகித்தார். நாடு முழுவதிலுமிருந்து 170 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மீனவர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், மீன்பிடி சங்கங்கள், மீன்வளத் துறை அதிகாரிகள்,  மற்றும் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மீன்வளத்துறையின் அதிகாரிகள், மாநில வேளாண்மை, கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், மீன்வள ஆராய்ச்சி நிறுவனங்கள், மீன்வள கூட்டுறவு அதிகாரிகள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்குவர்.

மத்திய அரசின் மீன்வளத் துறையின் செயலர் திரு ஜதீந்திர நாத் ஸ்வைன் பேசும் போது, மீன்வளத்துறை சார்ந்த பணிகளில் ஈடுபடும் பலருக்கு இன்சூரன்ஸ் பற்றிய புரிதல் இல்லாததே அடிப்படைப் பிரச்சினை என்று சுட்டிக்காட்டினார். மேலும் மீன்வளத் துறையில்  தனியார் மற்றும் உலகளாவிய இதர இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முதலீட்டை கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மத்திய அரசின் மீன்வளத் துறையால் வழங்கப்படும் குழு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் பற்றியும் அவர் விளக்கினார்.

மீன்வள இன்சூரன்ஸ் திட்டத்தை படிப்படியாக மேம்படுத்துவதற்கான முதல் படியாக கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டங்களில் தேவையான சட்ட விதிகள் இணைக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

 

ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் தொழில்துறை மற்றும் சிறிய மீன்பிடி கப்பல்கள் மற்றும் பெரிய மீன்வளர்ப்பு செயல்பாடுகள் போன்றவற்றிற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட மீன்பிடி இன்சூரன்ஸ் மற்றும் மீன்வளர்ப்பு இன்சூரன்ஸ் திட்டங்களை இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ரா எடுத்துரைத்தார்.

இந்த அமர்வின் போது, கொச்சியின் ஐகார்-சிஎம்எஃப்ஆர்ஐ-ன் மூத்த விஞ்ஞானி டாக்டர் ஷினோஜ் பரப்புரத்து, “இந்தியாவில் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு இன்சூரன்ஸ்: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் பேசினார்.

******

MS/GS/DL



(Release ID: 1887772) Visitor Counter : 161