கூட்டுறவு அமைச்சகம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடைபெற்ற கூட்டுறவுப் பயனாளிகள் மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

Posted On: 30 DEC 2022 9:40PM by PIB Chennai

கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  இன்றுநடைபெற்ற ‘கூட்டுறவுப்  பயனாளிகள் மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் திரு  பிரலாத் ஜோஷி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கர்நாடகாவில் கூட்டுறவு இயக்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல வேகத்தில் முன்னேறி வருகிறது. நாட்டிலேயே முதல் கூட்டுறவு சங்கம் கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் 1905ல் தொடங்கப்பட்டது .அங்கு  தொடங்கிய கூட்டுறவு இயக்கம் இன்று அமுல், கிரிப்கோ, இஃப்கோ, லிஜ்ஜத் பப்பட் என பல வெற்றிகரமான மாதிரிகளுடன் உலகின் முன்னுதாரணமாகத்  திகழ்கிறது என்று அமித் ஷா தமது உரையில் குறிப்பிட்டார்.

கர்நாடகாவில் நந்தினி பிராண்டின் கீழ், சுமார் 23 லட்சம் விவசாயிகள், பெரும்பாலும் பெண்கள், ஒரு நாளைக்கு ரூ.28 கோடி ஊதியம் பெறுகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையை  வளமாக்குகிறது. இது மிகப்பெரிய சாதனை. ‘மக்களுக்காக  உற்பத்தி, மக்களால்  உற்பத்தி’ என்பதுதான் கூட்டுறவு அமைப்புகளின் அழகு என்று மத்திய கூட்டுறவுத் துறை  அமைச்சர் கூறினார்.

நாட்டில் தனியாகக்  ‘கூட்டுறவு அமைச்சகத்தை’  உருவாக்கி, கூட்டுறவு இயக்கத்திற்குப்  புதிய வேகத்தையும் நீண்ட ஆயுளையும் பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார் என்று திரு அமித் ஷா கூறினார். உலகில் உள்ள 30 லட்சம் கூட்டுறவு சங்கங்களில் 9 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளன. இந்தியாவின் மக்கள்தொகையில் 91 சதவீதம் பேர் ஏதோ ஒரு வகையில் ஒரு கூட்டுறவு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மூலம் நாட்டின் 70 சதவீத விவசாயிகள் கூட்டுறவுகளில் பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில்  மாநில அளவிலான 33 கூட்டுறவு வங்கிகளும்,  மாவட்ட அளவிலான 363 கூட்டுறவு வங்கிகளும், 63,000 பிஏசிஎஸ் வங்கிகளும் உள்ளன. இன்று நமது விவசாய நிதியில் 19 சதவீதம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படுகிறது என்று திரு  ஷா கூறினார். 35 சதவீத உர விநியோகமும், 30 சதவீத உர உற்பத்தியும், 40 சதவீத சர்க்கரை உற்பத்தியும், 13 சதவீத கோதுமையும், 20 சதவீத நெல் கொள்முதலும் கூட்டுறவு நிறுவனங்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் கூட்டுறவுப் பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் உள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள அனைத்துக்  கூட்டுறவுகளின் தேசிய தரவுத்தளத்தை உருவாக்கும் பணியும் , புதிய கூட்டுறவு கொள்கையை உருவாக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் நாட்டின் முதலாவது கூட்டுறவுத்துறை அமைச்சர்  கூறினார். நபார்டு வங்கியுடன் இணைந்து தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின்  (என்சிடிசி-யின்) பங்கு  விரிவுபடுத்தப்பட உள்ளது. இதனால் கூட்டுறவு சங்கங்கள் சிறந்த முறையில் நிதியைப் பெற முடியும் என்று திரு  ஷா கூறினார்.

வெளிப்படைத் தன்மையுடன்  தேர்தலை நடத்துவதற்கான மாதிரிச் சட்டம் தயாரிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பல மாநில கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும், ஒரு மசோதா கொண்டுவரப்பட்டு, அது நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே  கூட்டுறவு சங்கங்களில் நிறுவனங்களைவிட அதிக வரி வசூலிக்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த பட்ஜெட்டில் கூட்டுறவு சங்கத்தின் கூடுதல் வரியை 12 % லிருந்து 7 % ஆகக் குறைத்து நிறுவனங்களுக்கு இணையாக கூட்டுறவு சங்கங்களைப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார் என்றும், மாற்று வரி 18% லிருந்து 15% ஆக குறைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

******

MS/SMB/DL



(Release ID: 1887688) Visitor Counter : 120