சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
2022-ஆம் ஆண்டில் சட்ட அமைச்சகத்தின் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முன்முயற்சிகளின் கண்ணோட்டம்
Posted On:
30 DEC 2022 12:50PM by PIB Chennai
• நீதிபதிகளின் நியமனம் மற்றும் பணியிடைமாற்றம்:
ஒரு வருடத்தில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிகபட்சமாக உயர் நீதிமன்றங்களில் 165 நீதிபதிகள் இந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். இவர்களுள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 பேர் நியமிக்கப்பட்டனர். 38 கூடுதல் நீதிபதிகள், உயர்நீதிமன்றங்களின் நிரந்தர நீதிபதிகளாக அறிவிக்கப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் உட்பட 8 நீதிமன்றங்களில் தலா ஒரு தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டார். 2 தலைமை நீதிபதிகளும், 6 உயர்நீதிமன்ற நீதிபதிகளும் பணியிடைமாற்றம் செய்யப்பட்டனர்.
• தொலை சட்ட சேவை:
2022-2023-ஆம் ஆண்டில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 755 மாவட்டங்களின் (இதில் 112 முன்னேற விரும்பும் மாவட்டங்கள் அடங்கும்) ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு தொலை சட்ட சேவை விரிவுபடுத்தப்பட்டது. தகுதிவாய்ந்த பயனாளிகளை இந்த சேவை அதிக அளவில் சென்றடைவதற்காக ஏராளமான பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. அக்டோபர் 31, 2022 வரை 25 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் இந்த சேவையினால் பலனடைந்துள்ளனர்.
• தேசிய சட்ட சேவைகள் ஆணையம்:
ஜூலை 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் 18-வது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டம் இந்த ஆணையத்தால் நடத்தப்பட்டது. சட்ட சேவைகளின் ஒருங்கிணைந்த விநியோகம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகமும், தேசிய சட்ட சேவைகள் ஆணையமும் கையெழுத்திட்டன. ஜூலை 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் நடைபெற்ற முதலாவது அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் ஆணையகங்களின் கூட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
• மின்னணு நீதிமன்றங்கள் இயக்கத் திட்டம்:
தொழில்நுட்பத்தின் உதவியுடன் நீதியின் அணுகலை மேம்படுத்தும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு நீதிமன்றம் ஒருங்கிணைந்த இயக்கத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் இதுவரை 18,735 மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. கொவிட் தொற்றினால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு காலம் முதல், நாடு முழுவதும் சுமார் 2 கோடி வழக்குகள் நீதிமன்றங்களால் காணொலி வாயிலாக நடத்தப்பட்டுள்ளன. குஜராத், ஒரிசா, கர்நாடகா, ஜார்கண்ட், பாட்னா மற்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றங்களின் நீதிமன்ற செயல்பாடுகள் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
• விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் திட்டம்:
நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 10, 2022 வரை இந்தத் திட்டத்திற்காக ரூ. 186.93 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1572.86 கோடி மதிப்பீட்டில் மார்ச் 31, 2023 வரை இத்திட்டம் தொடரும். இதில் மத்திய அரசின் பங்கு, ரூ. 971.70 கோடி. அக்டோபர் மாதம் வரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 733 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 413 பிரத்தியேக பாக்சோ நீதிமன்றங்களின் வாயிலாக 1,24,000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
• நீதி வழங்குதல் மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கான தேசிய இயக்கம்:
முறையான நீதி வழங்கப்படுவதற்காகவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காகவும் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் பல்வேறு உத்தி சார்ந்த முன்முயற்சிகளை பின்பற்றி வருகிறது. இதன் காரணமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து, டிசம்பர் 6, 2022 வரை உச்சநீதிமன்றத்தில் 69,598 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட/ துணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை முறையே 59,57,704 மற்றும் 4,28,21,378 ஆகும்.
• அரசியலமைப்பு தின கொண்டாட்டம்:
நவம்பர் 26-ஆம் தேதி அரசியலமைப்பு தினம் உச்சநீதிமன்றத்தால் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்ததோடு, நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். வெர்ச்சுவல் ஜஸ்டிஸ் கிளாக், நீதிமன்ற மேலாண்மையை விளக்கும் ஜஸ்டிஸ் செல்பேசி செயலி 2.0, டிஜிட்டல் நீதிமன்றம், பாதுகாப்பான இணையதள சேவைகள் போன்ற முன்முயற்சிகளை பிரதமர் அப்போது தொடங்கி வைத்தார்.
****************
(Release ID: 1887491)
AP/RB/GK
(Release ID: 1887527)
Visitor Counter : 389