பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஆண்டுக் கண்ணோட்டம் – 2022: நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்த்தல் துறை (ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்)
Posted On:
29 DEC 2022 9:07AM by PIB Chennai
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லாட்சி முக்கியமானது. "அதிகபட்ச நிர்வாகம், குறைந்தபட்ச அரசு" என்பதை அடைவதற்கு, நிர்வாகக் கட்டமைப்பை மிகவும் வெளிப்படையானதாகவும், திறமையாகவும், குடிமக்களுக்கு ஏற்றதாகவும் மாற்ற பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நல்லாட்சி வாரம் -2022
2022 டிசம்பர் 19 முதல் 25 வரையிலான நல்லாட்சி வாரத்தில் பொதுமக்களின் குறைகளைத் தீர்த்து மக்களுக்கு சேவைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட “முழுமையான அரசு நிர்வாகம்” என்ற தலைப்பில் ஒரு வார காலம் நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தின் போது, சுமார் 54 லட்சம் மக்கள் குறைகள் தீர்க்கப்பட்டன; சேவை வழங்கலுக்கான 315 லட்சம் விண்ணப்பங்கள் பைசல் செய்யப்பட்டன; நிர்வாகத்தில் 982 புதுமை முயற்சிகள் ஆவணப்படுத்தப்பட்டன.
நிலுவை விஷயங்களைப் பைசல் செய்ய சிறப்பு முகாம்கள்
தூய்மை மற்றும் அரசு அலுவலகங்களில் நிலுவை விஷயங்களைக் குறைத்தல் குறித்த சிறப்பு இயக்கம் 2.0, 2022 அக்டோபர் 2 முதல் 31 வரை நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் பிற அலுவலகங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த இயக்கத்தின் விளைவாக 89.85 லட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது; அலுவலகக் கழிவுகளை அகற்றியதன் மூலம் ரூ. 370.73 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்த இயக்கத்தின் போது சுமார் 4.39 லட்சம் பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டன. தக்கவைப்பு கால அட்டவணையை நிறைவு செய்த சுமார் 29.40 லட்சம் கோப்புகள் அகற்றப்பட்டன. பல அமைச்சகங்கள் 100% அகற்றல் இலக்கை அடைய முடிந்தது.
சிறப்பு இயக்கம் 2.0-ன் அளவு 2021-ன் சிறப்பு இயக்கத்தை விட 16 மடங்கு பெரியது. இந்த இயக்கம் சமூக ஊடகங்களில் 4 பில்லியன் பதிவுகளையும் 9 லட்சம் ஈடுபாடுகளையும் கொண்டிருந்தது.
பொதுமக்கள் குறைதீர்த்தலில் குடிமக்களின் குரலுக்கு அதிகாரமளித்தல்
2022 ஆம் ஆண்டில், சிபிகிராம்ஸ் எனப்படும் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்த்தல் மற்றும் கண்காணிப்பு அமைப்பில் 17.50 லட்சம் புகார்கள் பெறப்பட்டன, இவற்றில் 96.94% புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டன. 2022ல் மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் சராசரி பைசல் காலம் 27 நாட்களாக இருந்தது.
குடிமக்களிடமிருந்து நேரடியாகப் பின்னூட்டங்களை சேகரிக்க சிபிகிராம்ஸ் பற்றிய பின்னூட்ட அழைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது.
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கான பிரதமர் விருதுகள்
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கான பிரதமர் விருதுகள் 2021, குடிமைப்பணிகள் தினமான ஏப்ரல் 21, 2022 அன்று மாண்புமிகு பிரதமரால் வழங்கப்பட்டன. ஊட்டச்சத்து திட்டம், கேலோ இந்தியா, பிரதமரின் ஸ்வநிதி, ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம், சேவைகளை கடைக்கோடிவரை வழங்குதல் எனும் ஐந்து முன்னுரிமை திட்டங்களில் உயர்ந்த சாதனை களுக்காகவும் மத்திய/மாநில/மாவட்ட அளவிலான நிர்வாகத்தில் புதிய முயற்சிகளுக்காகவும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
15வது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி 2022 ஏப்ரல் 20 - 21 தேதிகளில் "வி
ஷன் இந்தியா@2047 - குடிமக்களையும் அரசையும் நெருக்கமாகக் கொண்டுவருதல்" என்ற கருப்பொருளில் இரண்டு நாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. "விஷன் இந்தியா@2047– ஆளுகை”, “தற்சார்பு இந்தியா, பிரதமரின் விரைவு சக்தி' ,'டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல், 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு', 'முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் - ஆகிய மையப்பொருள்களில் நடைபெற்ற கருத்தரங்க அமர்வுகளுக்கு மத்திய அமைச்சர்கள் தலைமை தாங்கினர்.
இ -நிர்வாகம் குறித்த 24வது தேசிய மாநாடு ஹைதராபாதில் 2022 ஜனவரி 7-8 தேதிகளில் "இந்தியாவின் தொழில்நுட்பம்: தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் டிஜிட்டல் நிர்வாகம்" என்ற தலைப்பில் நடைபெற்றது. சிறந்த இ -நிர்வாகப் பயன்பாடுகளுக்காக மத்திய அமைச்சகங்கள்/ துறைகள், மாநிலம்/ யூனியன் பிரதேச அரசுகள், மாவட்டங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் என 6 பிரிவுகளின் கீழ் தேசிய இ -நிர்வாக விருதுகள் 2021 வழங்கப்பட்டன.
சர்வதேசப் பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு
கூட்டுப் பணிக்குழு கூட்டங்கள், இணையவழி மாநாடுகள் மற்றும் உயர்நிலை பரிமாற்ற வருகைகள் மூலம் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் காம்பியாவுடன் சர்வதேச ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது.
மண்டல மாநாடுகள்
சென்னை, ஸ்ரீநகர், பெங்களூரு, இட்டாநகர் ஆகிய இடங்களில் சிறந்த நடைமுறைகளைப் பரப்புவதற்கான நான்கு மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887187
*****
AP/SMB/KRS
(Release ID: 1887266)
Visitor Counter : 197