கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் 2022-ம் ஆண்டு செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்
Posted On:
27 DEC 2022 3:36PM by PIB Chennai
உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கிலும் கடல்சார் மற்றும் நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கிலும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் சார்பில், தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. துறைமுகங்கள் மேம்பாட்டுக்காகவும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் 2022-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் முக்கிய சாதனைகளில் சில.
- சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.5,40,000 கோடி மதிப்பிலான 802 திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், இதுவரை ரூ.1,12,000 கோடி மதிப்பில் 220 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ரூ.2,21,000 கோடி மதிப்பில் 231 திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மீதம் உள்ள திட்டங்கள் பல்வேறு நிலைகளில் ஆய்வில் உள்ளன.
- குஜராத்தின் லோக்தலில் தேசிய கடல் சார் பாரம்பரிய வளாகம் அமைக்கப்படுகிறது. இத்திட்டம் 3 கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது.
- கடலோரக் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் சாகர் மாலா திட்டத்தின் கீழ், பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரையோர வணிக போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் உள்நாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு, உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து மற்றும் கடலோர சரக்கு போக்குவரத்தில் மானியங்கள் மற்றும் வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- கடலோரப் பகுதி மீனவர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் மீன்பிடி துறைமுகத் திட்டங்களுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்துடன் இணைந்து கப்பல் துறை அமைச்சகமும் பகுதி அளவில் நிதி வழங்குகிறது. சாகர் மாலா திட்டத்தின் கீழ் 5 மிகப் பெரிய மீன்பிடி துறைமுகங்கள் ரூ.549 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படுகின்றன.
- சாகர் மாலா தீன்தயாள் உபாத்யாயா கிராமியத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், துறைமுகம் மற்றும் கடல்சார் துறையில், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 2,400 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.
- பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு 2025-ஆம் நிதியாண்டுக்குள் நிறைவு செய்யப்படும் வகையில், ரூ.42,000 கோடி மதிப்பில் 81 திட்டங்களுக்கு கப்பல் துறை அமைச்சகம் இந்த ஆண்டில் ஒப்புதல் அளித்துள்ளது.
- மும்பையில் ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் 27.05.2022 அன்று இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து துறைமுகம் சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது.
- 30.07.2022 அன்று சபகர் தினம் கொண்டாடப்பட்டது. மும்பைக்கும், மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையே, தொடர்பை ஏற்படுத்தும் சபகர் துறைமுகம் தொடர்பான இந்த தினத்தின் போது நாள் முழுவதும் துறைமுக வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் 20.08.2022 அன்று ஈரானுக்கு நேரில் சென்று சபகர் துறைமுக மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
- 14.08.2022 அன்று மத்திய கப்பல்துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், சென்னை துறைமுகத்தில் 2 கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- செப்டம்பர் 2, 2022 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, மங்களூரு துறைமுகத்திற்கு நேரில் சென்று ரூ.1,277 கோடி மதிப்பிலான 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
- செப்டம்பர் 30, 2022 அன்று தமிழகத்தின் தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.231 கோடி மதிப்பில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய கப்பல் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் தொடங்கிவைத்தார்.
- குஜராத்தில் காண்ட்லா துறைமுகத்தில் 03.12.2022 அன்று ரூ.280 கோடி மதிப்பில் 4 புதிய திட்டங்களுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அடிக்கல் நாட்டினார்.
- 12.11.2022 அன்று விசாகப்பட்டினத்திற்கு நேரில் சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, ரூ.10,742 கோடி மதிப்பிலான துறைமுக திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் துறைமுகங்களின் சரக்குகள் கையாளும் திறன், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 8.78 சதவீதம் அதிகரித்துள்ளது.
- பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தின் கீழ், கடல் சார் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, 23.11.2022 அன்று கொல்கத்தாவிலும், 22.11.2022 மற்றும் 23.11.2022 ஆகிய நாட்களில் விசாகப்பட்டினத்திலும், கடல் சார் உச்சிமாநாடுகள் நடத்தப்பட்டன.
- தமிழகத்தின் தனுஷ்கோடி மற்றும் மகராஷ்ட்ராவின் கெல்ஷியில் புதிய கலங்கரை விளக்கங்கள் நிறுவப்பட்டுள்ளன.
- கடல் சார் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க கொச்சி கப்பல் கட்டும் நிறுவனமும், சென்னை ஐஐடி-யும் 06.11.2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
----
SM/PLM/KPG/RJ
(Release ID: 1886944)
Visitor Counter : 393