குடியரசுத் தலைவர் செயலகம்
ஐதராபாதில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குடியரசுத் தலைவர் உரை
உங்களது கண்ணோட்டங்களை விரிவாக்கவும், புரிதலை மேம்படுத்திக் கொள்ளவும் அதிகளவில் வாசிக்க வேண்டும். மாணவர்களுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அறிவுறுத்தல்
Posted On:
27 DEC 2022 1:55PM by PIB Chennai
நாட்டின் 75வது விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஐதராபாதில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தில் இன்று (27.12.2022) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார். ஐதராபாத் விடுதலை இயக்கம் தொடர்பாகவும், அதில் பங்கேற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் தொடர்பாகவும் நடைபெறும் புகைப்பட கண்காட்சியையும் அவர் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், ஒரு தேசத்தின் அடித்தளமாக கல்வி திகழ்கிறது என்றார். ஒவ்வொரு தனி நபரின் திறன்களையும் வெளிக்கொண்டுவரும் முக்கிய அம்சமாக கல்வி திகழ்கிறது என்று குறிப்பிட்டார். கேசவ் நினைவு கல்வி சங்கம் 1940-ம் ஆண்டில் சிறிய பள்ளியாக தொடங்கப்பட்டு தற்போது மிகப் பெரிய கல்விச் சங்கமாக வளர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். இந்த சங்கத்தின் கீழ் தற்போது 9 கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் 11,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருவதை அவர் சுட்டிக்காட்டினார். நீதிபதி கேசவ் ராவ் கோராட்கரின் நினைவாக இந்த சங்கம் நிறுவப்பட்டதாகக் கூறிய அவர், அவரது லட்சியங்களுக்கு கிடைத்த வெற்றியாக இந்த வளர்ச்சி, திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஐதராபாத் விடுதலையின் 75-வது ஆண்டு கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட அவர், இது இந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தேசத்திற்கும் மிகவும் முக்கியமானது என்று கூறினார். ஐதராபாத் விடுதலைக்காக வீரத்துடன் போராடிய ராம்ஜி கோண்டு, துரேபாஸ் கான், கொமரம் பீம், சுரவரம் பிரதாப் ரெட்டி, ஷொயபுல்லான் கான் உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்துவதாக அவர் தெரிவித்தார். இவர்களது வீரமும், தியாகமும் எப்போதும் நினைவுகூரப்பட்டு கௌரவிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
75-வது விடுதலைப் பெருவிழாவை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக நாம் கொண்டாடுவதை குறிப்பிட்ட அவர், விடுதலை என்பது நம்மை முன்பு அடக்கி ஆண்ட ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது மட்டுமல்ல என்று கூறினார். அதை தவிர நமது வளமான எதிர்காலத்திற்காக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்வதே விடுதலையின் முக்கிய அம்சம் என்று அவர் தெரிவித்தார். எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேறும் போது நமது இளைஞர்கள், நமது முன்னோர்கள் இட்ட அடித்தளத்தின் அடிப்படையில் தேசத்தை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். கடினமாக உழைத்து உயர் சிறப்பை அடையும் நோக்கத்தோடு செயலாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சமூகத்தின் நலனுக்காக பங்களிக்கும் வகையில் ஒவ்வொரு நபரும் பொறுப்புணர்வுள்ளவர்களாக செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார். நமது அரசியல் சாசன சித்தாந்தங்களின் மதிப்பீடுகளை உயர்த்திப் பிடித்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கி அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்களை எதிர்த்துப் போராடி எதிர்கால தலைமுறையினருக்காக பூமியைக் காக்கும் பணியில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
வாசிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த குடியரசு தலைவர், சுய மேம்பாட்டுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார். வாழ்நாள் முழுவதும் மாணவர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள இப்பழக்கம் உறுதுணையாக விளங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் காலமாக இது உள்ளது என்று குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக நபர்களுக்கு இடையே தகவல் தொடர்பு இடைவெளி அதிகரித்துள்ளதாக கூறினார். மாணவர்கள் தங்களது கண்ணோட்டத்தை விரிவாக்கிக் கொள்ளவும், புரிதலை மேம்படுத்திக் கொள்ளவும் வாசிக்கும் பழக்கத்தை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அறிவுறுத்தினார்.
**************
SM/PLM/KPG/KRS
(Release ID: 1886890)
Visitor Counter : 214