எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

நடப்பாண்டில் எஃகு அமைச்சகம் மேற்கொண்ட முக்கிய சாதனைகள் மற்றும், முன்முயற்சிகள்

Posted On: 26 DEC 2022 12:13PM by PIB Chennai

கட்டுமானம், உள்கட்டமைப்பு, வாகன உற்பத்தி, பொறியியல், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க துறைகளில் எஃகு, மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் எஃகுத் துறை அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. எஃகு உற்பத்தியில் இந்தியா தற்போது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளராகவும் வளர்ந்துள்ளது.

உற்பத்தி மற்றும் பயன்பாடு:

நடப்பு நிதியாண்டின் (2022,ஏப்ரல்- நவம்பர்) முதல் எட்டு மாதங்களில் எஃகுத் துறையின் உற்பத்தி செயல்பாடு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருந்தது. உள்நாட்டு எஃகு உற்பத்தி 78.090 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 6.09% அதிகமாகும். உள்நாட்டு எஃகின் பயன்பாடு கடந்த ஆண்டின் 67.32 மில்லியன் டன்னைவிட 11.9% அதிகரித்து, இந்த ஆண்டு 75.340 மில்லியன் டன்னாக பதிவானது. உள்நாட்டு கச்சா எஃகு உற்பத்தி, 81.96 மில்லியன் டன்னாக, கடந்தாண்டை விட 5.6% அதிகமாக இருந்தது.

எஃகுத்துறையின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள்:

•     சிறப்பு எஃகின் உள்நாட்டு உற்பத்திக்காக ரூ. 6322 கோடி மதிப்பீட்டில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள சிறப்பு எஃகு, வெள்ளை பொருட்கள், வாகனங்களின் உடல் பாகம் மற்றும் உதிரிப் பொருட்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்வதற்கான குழாய்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

•     இரும்பு, எஃகு ஆகியவற்றை உள்ளடக்கிய கச்சா பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறது. இரும்புத் தாதுக்கள் மற்றும் இரும்புத் தாதுத் துகள்கள் மீதான ஏற்றுமதி வரி, முறையே 50% மற்றும் 45%ஆக உயர்த்தப்பட்டது. இது தவிர பல்வேறு எஃகு பொருட்களுக்கு 15% ஏற்றுமதிவரி விதிக்கப்பட்டது.

•     இந்தியாவின் கார்பன் வெளியீடுகளில் 12% எஃகுத் துறைகளில் நிகழ்கிறது. கிளாஸ்கோ உறுதிப்பாடுகளின் ஒரு பகுதியாக 2070-ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய வெளியீடுகளை அடைய இந்தியா திட்டமிட்டுள்ளது. எஃகு துறையின் பங்குதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகளோடு எஃகு அமைச்சகம் தொடர்ந்து இது பற்றி ஆலோசித்து வருகிறது.

•     இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட எஃகை ஊக்குவிக்கும் முன்முயற்சி எஃகு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்படி முதற்கட்டமாக செயில் (SAIL) மற்றும் ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட தயாரிப்புகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது என்ற பெயரோடு அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

•     பாஸ்கராச்சாரியா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி தகவலியல் நிறுவனத்தின் உதவியோடு பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தில் எஃகு அமைச்சகமும் இணைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் இயங்கும் 1982 எஃகு பிரிவுகளின் புவி இடங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து இரும்புத் தாது மற்றும் மாங்கனிஸ் தாது சுரங்கங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.

•     அரசு மின்னணு வர்த்தக தளங்களின் மூலம் எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் எண்ணிக்கை 2022, ஏப்ரல்-நவம்பரில் கடந்தாண்டை விட 130.39% கூடுதலாகப் பதிவாகியுள்ளது.

•     விடுதலையின் அமிர்த பெருவிழாவை முன்னிட்டு ஜூலை மாதத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட கருப்பொருளில்  கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள், கண்காட்சிகள் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1886625

**************

PKV/RB/KRS (Release ID: 1886680) Visitor Counter : 153