நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் என்பது வளர்ந்த இந்தியாவின் முக்கிய அம்சமாகத் திகழும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 24 DEC 2022 3:21PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், வளர்ந்த இந்தியாவின் முக்கிய அம்சமாக நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் திகழும் என்றும், அனைத்து முயற்சிகளிலும் நுகர்வோரை மையமாகக் கொண்ட செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

நுகர்வோர் நலனுக்காக நுகர்வோர் விவகாரங்கள் துறை பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதற்காகவும், சிறந்த சாதனைகளுக்காகவும் இத்துறையை அமைச்சர் பாராட்டினார். நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் ஆணையங்கள், வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் முயற்சிகளுக்காக அவற்றையும் அவர் பாராட்டினார். புகார்களுக்காக உதவி எண்களை அணுகுபவர்கள் பெரும்பாலும் சிறிய நிறுவனங்களில் இருந்து வருபவர்கள் என்றும், அவர்கள் தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள் என்றும், பிற இடங்களில் உதவி பெற முடியாதவர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். எனவே, பல்வேறு செயல்முறைகளில் கவனம் செலுத்துவதற்கும், சரியான நேரத்தில் நீதியை வழங்குவதற்கும் அவர்களுக்கு உதவ மிகவும் திறம்பட்ட அணுகுமுறையுடன் கூடுதல் முயற்சியை மேற்கொள்வது நம் அனைவரது கடமையாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

இன்றைய கருப்பொருள், “நுகர்வோர் ஆணையங்களில் உள்ள வழக்குகளைத் திறம்படத் தீர்ப்பது” என்று குறிப்பிட்ட அமைச்சர், புகார் அளித்த நுகர்வோருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் விரைவான நீதியை உறுதி செய்வதை அடிப்படையாகக் கொண்ட அரசின் அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், வணிகத்துறையினர் மற்றும் நுகர்வோர் செயல்பாடுகள் ஆகிய இரண்டையும் எளிதாக்க அரசு அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

நுகர்வோர் விவகாரத் துறையின் முன்முயற்சிகள், பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட மூன்று முக்கியமான கருப்பொருள்களைப் பிரதிபலிப்பதாக திரு. பியூஷ் கோயல் எடுத்துரைத்தார். “ஒன்றுபடுதல், திறன் மேம்பாடு மற்றும் பருவநிலை மாற்றம்” ஆகிய மூன்று அவை என அவர் குறிப்பிட்டார்.

ஒருங்கிணைப்பை எளிதாக்குவதற்கும், வணிகத் துறையினருக்கும், சாமானிய மக்கள் நலனுக்காகவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் அமைச்சர் பேசினார். கடந்த சில ஆண்டுகளில், 1500-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன எனவும் சுமார் 39,000 இணக்க விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். பல சிறிய செயல்பாடுகள் குற்றமற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

எளிதில் வணிகம் செய்வதற்கும், வாழ்வை எளிதாக்குவதற்கும் சிறிய குற்ற நடவடிக்கைகள் தொடர்பான விதிகளை மாற்றும் வகையில், ‘ஜன் விஸ்வாஸ்' (விதிமுறைகள் திருத்தம்) மசோதா- 2022 என்ற விரிவான மசோதாவை அரசு வியாழக்கிழமை அறிமுகம் செய்தது என்றும் அவர் கூறினார்.

19 அமைச்சகங்கள் தொடர்பான பல்வேறு சட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விதிகள் இந்த மசோதாவின் மூலம் குற்றமற்றவையாக மாற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அரசின் அணுகுமுறையுடன் இது ஒத்துப்போகிறது என்றும் அவர் கூறினார்.

திறன் மேம்பாடு குறித்துப் பேசிய திரு பியூஷ் கோயல், மிஷன் கர்மயோகி எனப்படும் கர்ம யோகி இயக்கம் பற்றிப் பேசினார். மக்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக நாமே நம்மைப் பயிற்றுவித்துக் கொள்வதற்கான ஒரு தனித்துவமான முயற்சி இது என்று அவர் தெரிவித்தார். நுகர்வோர் குறைகள் நிவர்த்தி செயல்முறைகளில் ஈடுபட்டுள்ள 3000 பேருக்கும் இத்திட்டத்தின் கீழ் அவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அவர்களால் நுகர்வோரின் குறைகளை திறம்பட மற்றும் சரியான நேரத்தில் நிவர்த்தி செய்து நீதி வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். நுகர்வோர் விழிப்புணர்வுத் திட்டங்களை கடைசி மனிதனுக்கும் எடுத்துச் செல்ல, இதே போன்ற சில திட்டங்களை உருவாக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

பருவநிலை மாற்றம் குறித்து அமைச்சர் கூறுகையில், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிக்கு பங்களிப்பை வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார். 'மிஷன் லைஃப்' எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் நமது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தையும் அடுத்த தலைமுறைக்கு சிறந்த பூமியையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அணுகுமுறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

பணிகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கும், நுகர்வோர் உதவி எண்கள் போன்ற பிற முயற்சிகளுக்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காகவும் நுகர்வோர் விவகாரத் துறையை அவர் பாராட்டினார். முன்னதாக 2 மொழிகளில் மட்டுமே இருந்த தேசிய உதவி எண் (ஹெல்ப்லைன்), இன்று மேலும் 7 மொழிகளை இணைத்துள்ளதாகவும், தற்போது 12 மொழிகளில் சேவைகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் அவரவர் தாய்மொழியில் உரையாடும் வகையில் பரந்த நுகர்வோர் தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

3 'டி' (T)கள் எனப்படும் தொழில்நுட்பம் (Technology), பயிற்சி (Training) மற்றும் வெளிப்படைத்தன்மை (Transparency) ஆகியவை நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் நுகர்வோருக்குச் சிறந்த சேவையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்று அவர் கூறினார்.

ஜான் எஃப் கென்னடி கூறியதை மேற்கோள் காட்டி, "நுகர்வோருக்கு தரம் இல்லாத பொருட்கள் வழங்கப்பட்டால், நுகர்வோர் தகவல் தெரிந்த அடிப்படையில் பொருட்களைத் தேர்வு செய்ய முடியாவிட்டால், அவர்களது பணம் வீணடிக்கப்படுகிறது. அத்துடன் தேசிய நலன் பாதிக்கப்படுகிறது" என்று அவர் கூறியதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். நல்ல தரம் மற்றும் பொருட்களின் சரியான விலை ஆகியவை தொடர்பாக நுகர்வோர் அதிக அளவில் கோரிக்கை வைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். நம் அனைவரின் கூட்டு முயற்சியால், ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று திரு பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

**************

SM/PLM/DL


(Release ID: 1886323)