புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இந்த ஆண்டுக்கான செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்
Posted On:
20 DEC 2022 5:17PM by PIB Chennai
சிஓபி-26 மாநாட்டில் பிரதமரின் அறிவிப்புக்கு இணங்க மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 2030-ஆம் ஆண்டுக்குள், புதைபடிமம் அல்லாத ஆதாரங்கள் மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனை அடைவதை நோக்கி முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இதுவரை அதாவது 31.10.2022 வரை நாட்டில் இந்த வகை மின்சார உற்பத்தித் திறன் மொத்தம் 172.72 ஜிகா வாட்டாக அதிகரித்துள்ளது. இதில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 119.09 ஜிகா வாட்டும் பெரும்புனல் திட்டங்கள் மூலம், 46.85 ஜிகா வாட்டும், அணுமின் சக்தி மூலம் 6.78 ஜிகா வாட்டும் உற்பத்தியாகிறது. நாட்டின் மொத்த மின்சார உற்பத்தித் திறனில் இது 42.26 சதவீதமாகும். 31.10.2022 வரையிலான நாட்டின் மின்சார உற்பத்தித் திறன் 408.71 ஜிகா வாட்டாக உள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவு திறனில் இந்தியா உலக அளவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதே போல காற்றாலை மின்சார உற்பத்தி நிறுவு திறன், சூரிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஆகியவற்றிலும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2022 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவு திறன் மொத்தம் 14.21 ஜிகா வாட் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைவிட அதிகமாகும். கடந்த ஆண்டின் 11.9 ஜிகா வாட் மின்சார நிறுவு திறன் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
14 மாநிலங்களில் 39.28 ஜிகா வாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட 56 சூரிய சக்தி பூங்காக்களை அமைக்க 31.10.2022 வரை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
காற்றாலை எரிசக்தியைப் பொறுத்தவரை, 2022 ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில், 1,761.28 மெகா வாட் மின்சார உற்பத்தித் திறன் எட்டப்பட்டது.
டீசல் பம்புகளுக்கு பதிலாக விவசாயிகளுக்கு மின்சார மோட்டார்களைப் பயன்படுத்தி எரிசக்தி மற்றும் தண்ணீர் பாதுகாப்பை வழங்க வகை செய்யும் பிரதமரின் விவசாய உர்ஜா சுரக்ஷா எவம் உத்தான் மகா அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உயிரி எரிசக்தி
அமைச்சகத்தால் உயிரி எரிசக்தித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நகர்ப்புறம், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயக் கழிவுகள் மற்றும் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்.
உயிரி எரிபொருள், சாண எரிவாயு, திட்டத்தில் வறட்டிகள் மற்றும் உருண்டைகள் தயாரித்தல்.
சாண எரிவாயு மின்சக்தித் திட்டம்.
புதிய தேசிய உயிரி எரிவாயு திட்டம் மற்றும் இயற்கை உரத்தயாரிப்புத் திட்டம்.
இந்த வகையிலான திட்டங்கள் மூலம் 2022-ஆம் ஆண்டின் 30 மெகா வாட் உற்பத்தித் திறன் எட்டப்பட்டது.
மனித வள மேம்பாடு
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கான ஆய்வக ஆதரவு குறுகிய கால பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத்திட்டங்கள், பயிற்சி உதவித்தொகைகள், பழகுநர் பயிற்சி ஆகியவற்றை மனிதவள மேம்பாட்டுத்திட்டம் வழங்கி வருகிறது.
சூரியமித்ரா திட்டத்தின் கீழ், ஏப்ரல் 2021 முதல் அக்டோபர் 2022 வரை மொத்தம் 4,323 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 51,529 பேருக்கு சூரியமித்ரா பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. 2015-16 நிதியாண்டிலிருந்து 2022 அக்டோபர் மாதம் வரை இவர்களில் 26,967 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
சிறிய நீர் மின்திட்டங்கள் பராமரிப்பிற்கான பயிற்சி வழங்கும் ஜல் உர்ஜா மித்ரா திறன் மேம்பாட்டுத்திட்டத்தை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 5 ஆண்டுகளில் 1,700 பேரை பயிற்சிப் பெற்றவர்களாக ஆக்குவது இதன் இலக்காகும். புனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை, ரூர்க்கியில் உள்ள ஐஐடி ஆகியவை இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகின்றன.
வாயு மித்ரா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தை அமைச்சகம் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள தேசிய காற்று மின்சக்தி நிறுவனத்தின் காற்றாலை மின்திட்டங்களுக்கான பயிற்சி பெற்ற பணியாளர்களை 2021-22 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் 5,000 பேரை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சூரியசக்தி கூட்டணி
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 30.11.2015 அன்று நமது பிரதமர் மற்றும் பிரான்ஸ் அதிபரால் சர்வதேச சூரியசக்தி கூட்டணி தொடங்கப்பட்டது. இந்த கூட்டணியில் 15 நாடுகள், இணைந்துள்ளன. இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முதலாவது சர்வதேச அரசாங்களுக்கு இடையிலான அமைப்பு இதுவாகும்.
ஐநா சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த கூட்டணியில் சேருவதற்கு ஏற்ற வகையில் 15.07.2020 அன்று ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் 30.11.2021 நிலவரப்படி 110 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதில் 90 நாடுகள் அதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டன. சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் 5-வது கூட்டம் 18.10.2022 அன்று நடைபெற்றது. இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை கூட்டணியின் தலைவர் மற்றும் இடைத்தலைவராக 3-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885147
**************
SM/PKV/KPG/KRS
(Release ID: 1885220)
Visitor Counter : 650