நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜிஎஸ்டி கவுன்சிலின் 48 ஆவது கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் புதுதில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் தலைமை தாங்கினார்

Posted On: 17 DEC 2022 3:28PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் (பெருநிறுவன) விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் 48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டம்  இன்று 

புதுதில்லியில்  காணொலிக்  காட்சி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி மற்றும் மாநிலங்கள் / (சட்டமன்றம் உள்ள) யூனியன் பிரதேசங்களின்  நிதியமைச்சர்கள், மத்திய  நிதியமைச்சகம் மற்றும் மாநிலங்கள் /  யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜிஎஸ்டியில் இணக்கத்தை உருவாக்குவதற்கான மற்றும் வர்த்தக வசதிக்கான நடவடிக்கைகளாக ஜிஎஸ்டி வரிவிகிதங்களில் மாற்றங்கள் தொடர்பான பரிந்துரைகளை ஜிஎஸ்டி கவுன்சில் வழங்கியது.

இதன்படி பயறு வகைகளின் தொலிஉமி, தவிடு மீதான 5% வரி ரத்து செய்யப்படுகிறது.

பெட்ரோலுடன் கலப்பதற்கு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எத்தைல் ஆல்கஹால் மீதான 18.5% வரி 5% ஆகக் குறைக்கப்படுகிறது.

புதினா எண்ணெய்க்கு (மெந்தா எண்ணெய்க்கு) இருப்பது போல் மெந்தா பொருள்களுக்கும் கொள்முதல் செய்வோரிடம் வரிபெற முடிவு செய்யப்பட்டது .

நான்கு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் மோட்டார் வாகனங்களுக்கு 22% என்ற உயர் அளவான இழப்பீட்டு வரிவிகிதம் பொருந்தும்.

ரூபே கடன் அட்டைகள், குறைந்த மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்குரிய பிம் யுபிஐ ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் வங்கிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதன் தன்மையில் மானியம் என்பதால் இது வரிவிதிப்புக்கு உட்படாது.

சரக்குகள் அல்லது சேவைகளை அல்லது இரண்டையும் வழங்காமல் ரசீது மட்டும் வழங்கிய குற்றம் தவிர மற்றவற்றில் ஜிஎஸ்டியின் கீழ் வழக்கு தொடர்வதற்கான தொகையின் அளவு ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 2 கோடியாக உயர்த்தப்படுகிறது. 

ஜிஎஸ்டியில்  பதிவு செய்யாதவர்களுக்கு சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறுகின்ற நடைமுறை இல்லை. எனவே  இதில் மாற்றம் கொண்டுவர சிஜிஎஸ்டி விதிகள் 2017ல் திருத்தம் செய்ய ஜிஎஸ்டி கௌன்சில் பரிந்துரை செய்துள்ளது.

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநிலங்களுக்கு இடையே இ-வணிக ஆப்ரேட்டர்கள் மூலம் பொருள்கள் மற்றும் சேவைகள் வழங்க 47ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.  இதற்கான நடைமுறைகளுக்குக் கால அவகாசம் தேவைப்படுவதால் இதனை 01.10.2023 முதல் அமல்படுத்த 48ஆவது கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

**********

AP/SMB/DL


(Release ID: 1884439) Visitor Counter : 466