நிலக்கரி அமைச்சகம்

மேம்படுத்தப்பட்ட நிலக்கரி உற்பத்தி மற்றும் மின் துறைக்கான விநியோகம்: மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி விளக்கம்

Posted On: 14 DEC 2022 1:01PM by PIB Chennai

நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு ஏதும் இல்லை. 2022-2023-ம் நிதி ஆண்டில் (நவம்பர் வரை) அகில இந்திய அளவில் நிலக்கரி உற்பத்தி 524.2 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 17 சதவீத வளர்ச்சி ஆகும்.   2022-23-ஆம் ஆண்டில் மின் துறையின் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதைப் பூர்த்தி செய்ய, கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் நவம்பர் 2022 வரை 380.58 மில்லியன் டன் நிலக்கரியை மின் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில்  339.8 மில்லியன் டன்கள் ஆக இருந்தது. இது 12 சதவீத வளர்ச்சி ஆகும்.

மின்சாரத்துறைக்கு நிலக்கரி விநியோகம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, மின்துறை அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், மத்திய மின்சார ஆணையம், கோல் இந்தியா லிமிடெட் (CIL) மற்றும் சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, ரயில்வே வாரியத்தின் தலைவர், நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் மின் துறை அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரி அனுப்பப்படுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நிலக்கரி, இந்தியாவின் முக்கிய மின்னாற்றல் ஆதாரமாக இருப்பதால், 2030-2035-ம் ஆண்டுகளில் தேவை உச்சத்தை எட்டும். அதற்கேற்ப, நாட்டில் நிலக்கரி கிடைப்பதை மேம்படுத்த அரசால் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது:

1) கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் (CIL) சுரங்கங்களில் இருந்து உற்பத்தியை மேம்படுத்துதல்

2) வணிக ரீதியான நிலக்கரி சுரங்கங்களில் இருந்து உற்பத்தியை மேம்படுத்துதல்.

3) சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2021 இயற்றப்பட்டதன் மூலம் சந்தை விற்பனையை எளிதாக்குதல்

4) ரயில் திட்டங்கள் மற்றும் நிலக்கரியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து முறைகள் மூலம் நிலக்கரி போக்குவரத்தில் ஒட்டுமொத்த முன்னேற்றம்.

5) மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுரங்கங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்

6) நிலக்கரி அமைச்சகத்தின் வழக்கமான கண்காணிப்பு.

7) பயன்பாட்டில் இல்லாத நிலக்கரிச் சுரங்கங்களை விரைந்து செயல்படுத்துவதற்கான அனுமதிகளை எளிதாக்குவதற்கான ஒற்றைச் சாளர நடைமுறை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இத்தகவலை நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

**************

AP/PLM/RJ/KPG



(Release ID: 1883504) Visitor Counter : 139