பாதுகாப்பு அமைச்சகம்

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் அளித்த அறிக்கை

Posted On: 13 DEC 2022 1:09PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு  ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையின் மொழிபெயர்ப்பு வருமாறு:

“மாண்புமிகு சபாநாயகர்/தலைவர் அவர்களே,

கடந்த  9-ந்தேதியன்று அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பிரிவில் நமது எல்லையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இந்த அவையில் விவரிக்க விரும்புகிறேன்.

9-ம் தேதியன்று, சீனாவின் பிஎல்ஏ  துருப்புக்கள் தவாங் பிரிவின்  யாங்ட்சே பகுதியில் உள்ள எல்லைக் கோட்டை  மீறி, தன்னிச்சையாக  தற்போதைய நிலையை மாற்ற முயன்றனர். சீன முயற்சியை நமது துருப்புக்கள் மிக உறுதியான முறையில் எதிர்கொண்டன. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மற்றும் கைகலப்பில், பிஎல்ஏ  நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை இந்திய ராணுவம் துணிச்சலாகத் தடுத்தது. இதனால் அவர்கள் தங்கள் நிலைக்குத்  திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நமது தரப்பில் உயிரிழப்புகளோ, கடுமையான காயமோ ஏற்படவில்லை என்பதை இந்தச் சபையுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்திய ராணுவத் தளபதிகளின் சரியான நேரத் தலையீடு காரணமாக, பிஎல்ஏ வீரர்கள் தங்கள் நிலைகளுக்குத் திரும்பிச் சென்றனர். சம்பவத்தின் தொடர்ச்சியாக, அப்பகுதியில் உள்ள நமது உள்ளூர் தளபதி 11ந்தேதி அன்று எதிர்த் தரப்பினருடன்,  நிறுவப்பட்ட வழிமுறைகளுக்கு இணங்க பிரச்சினையை விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தினார்.  இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் தவிர்த்து, எல்லையில் அமைதியையும், இணக்கமான சூழலையும் நிலைநாட்ட சீனத் தரப்புக் கேட்டுக் கொள்ளப்பட்டது. தூதரக  வழிமுறைகள் மூலமும் சீனத் தரப்பிடமும் இந்தப் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டது.

நமது படைகள் நமது பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளன என்றும், அதன் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்கும் நடவடிக்கையைத் தொடரும் என்றும் நான் இந்த அவையில் உறுதியளிக்க விரும்புகிறேன். நமது ராணுவ வீரர்களின் துணிச்சலான முயற்சிக்கு உறுதுணையாக இந்த முழு அவையும் ஒன்றுபட்டு நிற்கும் என்று நான் நம்புகிறேன். ஜெய் ஹிந்த்!”

************** 


AP/PKV/IDS

 (Release ID: 1883079) Visitor Counter : 202