ரெயில்வே அமைச்சகம்
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் திரு அஷ்வினி வைஷ்ணவ் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்
சென்னை, மதுரை உள்பட 50 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்- ரயில்வே அமைச்சர்
प्रविष्टि तिथि:
10 DEC 2022 6:28PM by PIB Chennai
ரயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் இன்று வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஐஐடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பிரதமர் தலைமையில், முதலில் நாடு, எப்போதும் நாடே முதல் என்ற உணர்வுடன் உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்திய ரயில்வே செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். பல்வேறு நகரங்களின் ரயில் நிலையங்களில் அந்த நகரத்தின் அடையாளம் தெளிவாகத் தெரிய வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாக அவர் மேலும் கூறினார்.
பொதுவாக, நகரின் இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் ரயில் நிலையம் அமைய வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், இதை நிறைவேற்றும் வகையில் ரயில் நிலைய விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இதனுடன், காத்திருப்பு பட்டியல்கள், இடையூறுகள் மற்றும் ரயில் இயக்கங்களில் ஏற்படும் தாமதங்களிலிருந்து மக்களை விடுவிக்கும் வகையில், திறன்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன, என்று அவர் கூறினார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் ரயில் மற்றும் மின்னணு உள்ளிட்ட பிற துறைகளில் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருந்தது. இன்று, இந்திய பொறியாளர்களின் ஆதரவுடன்,இந்த துறைகளில் பெரிய அளவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என திரு வைஷ்ணவ் கூறினார்.
நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படும் என்று திரு வைஷ்ணவ் தெரிவித்தார். இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாரணாசி சந்திப்பு, காசி ரயில் நிலையம் ஆகியவை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்றியமைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அடுத்த 50 ஆண்டு கால தேவைகளை கருத்தில் கொண்டு இந்த நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அகமதாபாத், காந்திநகர், சார்பாக் லக்னோ, சென்னை, பெங்களூரு கண்டோன்மென்ட், மதுரை உள்ளிட்ட 50 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இவற்றில் 45 ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கியுள்ளன என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதையும் இணைக்கும் வகையில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை காசி தமிழ் சங்கமம் நிறைவேற்றுகிறது என்றார்.
முன்னதாக, பண்டிட் மதன் மோகன் மாளவியா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக தற்போது இந்தியா மாறியுள்ளது என்று திரு அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். மொபைல் கோபுரங்கள் மற்றும் 5ஜி தொழில்நுட்ப வசதிகள் கொண்ட உலகின் ஆறாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற மாணவர்கள் முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
5ஜி துறையிலும் பணிகள் வேகமாக நடந்து வருவதாக கூறிய திரு வைஷ்ணவ், நாட்டில் உள்ள 100 பல்கலைக்கழகங்களில் 5ஜி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது ஒவ்வொரு வாரமும் 2500, 5ஜி கோபுரங்களை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் வாரந்தோறும் 10,000 கோபுரங்களை அமைக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த தீபாவளிக்குள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு 5ஜி கட்டமைப்பு சென்றடையும் என்று அமைச்சர் உறுதியளித்தார்
******
SRI / PKV / DL
(रिलीज़ आईडी: 1882379)
आगंतुक पटल : 205